விக்னேஸ்வரன் முதிர்சி அரசியல்வாதியல்ல மோசடி அரசியல்வாதி – கஜேந்திரகுமார்
தேர்தலுக்கு முன்னர் கூட்டமைப்பிற்கு மாற்று அணி என கூறிக்கொள்ளும் விக்னேஸ்வரன் தேர்தலுக்கு பின்னர் கூட்டமைப்போடு இணைந்து பயணிக்க தயார் என கூறுகின்றார். இவரிடம் இருப்பது முதிர்ச்சி அரசியல் அல்ல மோசடி அரசியலே, என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
இன்றைய தினம் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் எம்முடைய வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த வெற்றியினை ஏதோ ஒரு விதத்தில் தடுப்பதற்கு அரச முகவர்களும், எமக்கு போட்டியாக உள்ள ஏனைய தரப்புகளும் சேர்ந்து பொய்யான தகவல்களை தேர்தலுக்கு அண்மித்த திகதிகளில் வெளியிடவுள்ளனர். பொய்களைக் கூறி மக்களைக் குழப்பி எமது வெற்றியினை குறைப்பதற்கான சதிமுயற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர்.
புலம்பெயர் உறவுகளிடம் எமக்கு இருக்கும் செல்வாக்கைக் குறைக்க இயக்கத்தின் பெயரில் பொய்யான தகவல்களை சிலர் பரப்பவுள்ளதாக நம்பத்தகுந்த நபர்களிடம் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நடந்தவற்றை மக்கள் நினைவுகூற வேண்டும்.
கடந்த தேர்தலைப்போல் இந்தத் தேர்தலிலும் எங்களுடைய வெற்றியைத் தடுப்பதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. எனவே ஊடகங்கள் இவ்வாறான மோசடிகளுக்கு துணைபோகாது நடுநிலைமையாக செயற்பட வேண்டும்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினை பலவீனப்படுத்த அல்லது உடைப்பதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுகின்றனர். மட்டக்களப்பில் பிள்ளையான் குழுவும், அம்பாறையில் கருணா குழுவும் எமது கட்சியின் வேட்பாளர்களை அச்சுறுத்துகின்றனர்.
அரசாங்கம், ஓட்டுக்குழு, போலி தமிழ் தேசியம் பேசுகின்ற தரப்பினர் என அனைவரும் எம்மை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றனர்.நாங்கள் தமிழர்களின் நலன் சார்ந்து சிந்திப்பதால் எம்மை பலவீனப்படுத்துகின்றனர் என்பதனை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் எங்களை தோற்கடிப்பது தவறான விடயம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் எமக்கு சவாலானவர்கள் அல்ல. கூட்டமைப்பினர் மக்களிடம் எதிர்ப்பை சம்பாதித்துள்ளனர். கூட்டணியினர் பேசுபொருளாகவே இல்லை. 2013இல் அரசியலுக்கு வந்த விக்னேஸ்வரன் கூட்டமைப்பினரை தொடர்ச்சியாக குற்றம் சுமத்துகின்றார். 2010ஆம் ஆண்டில் இருந்து நாம் கூறியவற்றையே அவர் இப்போது கூறுகின்றார்.
Comments are closed.