போலீசாரின் அதிரடி என்கவுண்டரில் 26 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

மகாராஷ்டிர மாநிலத்தில் போலீசார் நடத்திய அதிரடி என்கவுன்டரில் 26 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காட்டுப்பகுதியில் இருந்து தற்போது வரை 26 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவில் ஆயுதமேந்தி பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் மாவோயிஸ்ட் இயக்கத்தினர் பின் தங்கிய பகுதிகளில் செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக மேற்குவங்கம், ஜார்க்கண்ட், பீகார், சட்டீஸ்கர், ஒடிசா, மகாராஷ்டிரா, தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களின் காடும், மலையும் சார்ந்த பகுதிகளில் தங்கியிருந்தவாறு பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

முன்னதாக பல முறை மாவோயிஸ்ட்கள் பாதுகாப்பு படையினரை குறி வைத்து பயங்கரவாத சம்பவங்களை அரங்கேற்றியிருக்கின்றனர். மாவோயிஸ்ட்களை ஒடுக்க அவர்களின் நடமாட்டத்தை கண்டறிந்து சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு படையினர் அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தின் சட்டீஸ்கர் மாநில எல்லையையொட்டி அமைந்துள்ள கட்சிரோலி மாவட்டத்தில் மாவோயிஸ்ட்களுக்கும், போலீசாருக்கும் இடையே திடீரென துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டிருப்பதாக கட்சிரோலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்கித் கோயல் தெரிவித்துள்ளார்.

காட்டுப்பகுதியில் நடைபெற்ற இந்த துப்பாக்கி சண்டையில் 26 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அன்கித் கோயல் கூறுகையில், கூடுதல் எஸ்.பி சவும்யா முண்டே தலைமையில் சி-60 போலீஸ் கமாண்டோ படையினர் கோர்ச்சி பகுதியின் மர்டிண்டோ காட்டுப்பகுதியில் இன்று காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது மாவோயிஸ்ட்கள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.

போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் மாவோயிஸ்ட் தரப்பில் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டது. தற்போது சண்டை ஓய்ந்த நிலையில் காட்டுப்பகுதியில் இருந்து 26 மாவோயிஸ்ட்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. 4 போலீசாருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் ஹெலிகாப்டர் மூலம் நாக்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொல்லப்பட்டவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகிறது. கொல்லப்பட்டவர்களில் முக்கிய மாவோயிஸ்ட் தலைவரின் உடல் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. விரைவில் அது உறுதி செய்யப்படும்.” இவ்வாறு அன்கித் கோயல் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.