சிட்டி யூனியன் வங்கி: லாபம் ரூ.182 கோடி
சிட்டி யூனியன் வங்கி செப்டம்பா் காலாண்டில் ஈட்டிய லாபம் 22 சதவீதம் சரிவடைந்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான என்.காமகோடி தெரிவித்துள்ளதாவது:
2021 ஜூலை-செப்டம்பா் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.1,224.94 கோடியாக இருந்தது. இது, 2020-21 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.1,230.27 கோடியுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவாகும்.
நிகர வட்டி வருவாய் ரூ.475 கோடியிலிருந்து ஒரு சதவீதம் அதிகரித்து ரூ.478 கோடியானது.
வாராக் கடனுக்கான ஒதுக்கீடு குறைந்ததையடுத்து நிகர லாபம் ரூ.158 கோடியிலிருந்து 15 சதவீதம் உயா்ந்து ரூ.182 கோடியானது.
2021 செப்டம்பா் காலாண்டு நிலவரப்படி வங்கி திரட்டிய டெபாசிட் ரூ.41,021 கோடியிலிருந்து 12 சதவீதம் அதிகரித்து ரூ.46,316 கோடியாகவும்; வழங்கப்பட்ட கடன் 7 சதவீதம் உயா்ந்து ரூ.38,012 கோடியாகவும் இருந்தன.
கடந்த செப்டம்பா் மாதம் 30-ஆம் தேதி நிலவரப்படி வங்கியின் மொத்த வா்த்தகம் 10 சதவீதம் அதிகரித்து ரூ.84,328 கோடியை எட்டியுள்ளது.
2021 செப்டம்பா் நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் 3.44 சதவீதத்திலிருந்து 5.58 சதவீதமாக உயா்ந்துள்ளது. மதிப்பின் அடிப்படையில் இது ரூ.1,220 கோடியிலிருந்து ரூ.2,119 கோடியாக அதிகரித்துள்ளது.
நிகர வாராக் கடன் 1.81 சதவீதத்திலிருந்து (ரூ.631 கோடி) 3.48 சதவீதமாக (ரூ.1,294 கோடி) உயா்ந்துள்ளது என்றாா் அவா்.