வீடு வீடாக மக்களை தேடி சென்று நலத்திட்ட விண்ணப்பங்களை தரும் எம்.எல்.ஏ.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் 4 பிராந்தியங்கள் உள்ளன. இங்கு மொத்தம் 30 தொகுதிகளும், 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். பல எம்.எல்.ஏ.க்களை எளிதில் மக்கள் அணுக முடியும். சட்டமன்ற தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்களுக்கென அலுவலகங்கள் உள்ளன.
தங்களின் ஆதரவாளர்கள், கட்சி நிர்வாகிகளை நியமித்து மக்களை தொடர்புகொள்வது வழக்கம். அரசு வழங்கும் நலத்திட்ட விண்ணப்பங்களை எம்.எல்.ஏ.க்களிடம் பெற்று அதன்மூலம்தான் அரசு அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் எம்.எல்.ஏ.க்கள் அலுவலகங்கள், வீடுகளுக்கு பொதுமக்கள் வந்து செல்வர்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வழக்கத்துக்கு மாறாக 6 சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். உழவர்கரை சட்டமன்ற தொகுதியில் சிவசங்கர் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் வித்தியாசமாக தன் தொகுதி மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்பதோடு, அங்கேயே நலத்திட்ட விண்ணப்பங்களையும் வழங்குகிறார்.
மக்கள் பலரும் பல நல திட்ட உதவிகளை எம்எல்ஏ அலுவலகங்களை நாடுவார்கள். இந்நிலையில் புதுச்சேரியில் சுயேட்சை எம்எல்ஏ சிவசங்கரன் தனது தொகுதியில் ஒவ்வொரு பகுதியாக வீடு வீடாக சென்று நேரடியாகவே விண்ணப்பம் அளித்து உதவத் தொடங்கியுள்ளார்.
உழவர்கரை ஜெஜெ நகர் பகுதிக்கு சென்று வீட்டில் இருப்போரை விசாரித்தார். அங்கிருந்த முதியோருக்கு ஓய்வூதியம் இல்லாததை அறிந்து விண்ணப்பம் அளித்தார். அதையடுத்து இரு பெண் குழந்தைகள் இருந்ததால் மத்திய அரசு நிதியுதவி தரும் விண்ணப்பங்களை தந்தார்.
அதேபோல் குடிசை வீடு இருந்தால் வீடு கட்டும் திட்டம் தெரிவித்து விண்ணப்பம் அளிக்கிறார். இவர் ஒரு நாளைக்கு ஒரு பகுதி என முடிவு செய்து வீதி, வீதியாக செல்கிறார். அவரின் உதவியாளர்களும் உடன் செல்கின்றனர். பொதுமக்களின் குறைகளை கேட்கும் அவர் கணவரால் கைவிடப்பட்டோர், முதியோர், விதவை ஆகியோரிடம் பென்ஷன் வாங்குகிறீர்களா? என கேட்கிறார்.
உதவித்தொகை பெறாதவர்களுக்கு அங்கேயே விண்ணப்பம் கொடுத்து உதவியாளர் மூலம் பூர்த்தி செய்து பெற்றுக்கொள்கிறார். வீடு கட்டும் திட்டத்துக்கான படிவம், தாழ்த்தப்பட்டோர் சலுகை பெறுவதற்கான படிவம் உள்ளிட்ட விண்ணப்பங்களையும் கொடுத்து பூர்த்தி செய்து பெற்றுக்கொள்கிறார். அவரே துறைகளை அணுகி விண்ணப்பங்களை அளித்து நலத்திட்டங்களை பெற்றுத்தர முயற்சிக்கிறார்.
இதனால் பயன்பெறும் மக்கள், “மழைகால நிவாரணமாக அரிசி, சானிட்டைசர், முககவசம் தருவதை விட விண்ணப்பங்கள் அரசு நலத்திட்ட உதவிகளை வீடு தேடி வந்தே தருவதுதான் வாழ்க்கைக்கு உதவும்” என்றனர்.
இதுபற்றி சுயேட்சை எம்எல்ஏ சிவசங்கரன் கூறுகையில், “புதுச்சேரியில் எங்கள் தொகுதியில் பல நகர்பகுதிகளுக்கு நேரடியாக காலையும், மாலையும் செல்கிறேன். வீடு வீடாக சென்று அவர்களுக்கு தேவையான உதவிக்கு அரசு நலத்திட்ட உதவி விண்ணப்பம் தருகிறேன். தேவையெனில் பூர்த்தி செய்து நாங்களே விண்ணப்பித்து நலத்திட்ட உதவி பெற்றுதருகிறோம்.
அதனால் கையோடு அனைத்து விண்ணப்பங்களுடன் செல்கிறோம். கடந்த ஐந்து ஆண்டுகள் முதியோர் உதவித்தொகைக்கு புதிதாக ஒருவர் கூட சேர்க்கப்படவில்லை. ஆனால் தற்போது ஆண்டுக்கு 300 விண்ணப்பங்கள் மட்டுமே ஒவ்வொரு தொகுதிக்கும் அரசு தருகிறது. அந்த எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். மக்களின் பிரச்சினை தீர்க்க நேரடியாக செல்வதுதான் அதிக பலன் தருகிறது” என்கிறார்.
வீடு, வீடாக சென்று எம்எல்ஏ குறைகளை கேட்பதுடன், விண்ணப்பங்களை வழங்கி வருவது சுயேச்சை எம்எல்ஏ சிவசங்கருக்கு தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது.