மாவட்ட நீதிபதி மீது போலீசார் திடீர் தாக்குதல் – வழக்கு விசாரணையில் நடுவே பரபரப்பு சம்பவம்..

வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்த நீதிபதியை, இரு போலீஸ் அதிகாரிகள் சேர்ந்து கொண்டு அடித்து உதைத்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தை பரபரப்பாக்கி இருக்கிறது.

பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள ஜான்ஹர்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதியாக இருப்பவர் அவினாஷ் குமார். இன்று அவர் வழக்குகள் விசாரணையில் ஈடுபட்டிருந்த போது நீதிமன்ற வழக்கு ஒன்றில் ஆஜராக வந்திருந்த ஆய்வாளரும், உதவி ஆய்வாளர் ஒருவரும், நீதிபதி அவினாஷ் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

கோகர்திஹா காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்து வரும் கோபால் பிரசாத் மற்றும் துணை காவல் ஆய்வாளரான அபிமன்யு குமார் ஆகிய இரு அதிகாரிகளும் இன்று வழக்கு விசாரணை ஒன்றில் ஆஜராக வந்திருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்த நீதிபதி அவினாஷை இருவரும் சரமாரியாக தாக்கத் தொடங்கினர். நீதிபதியின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், நீதிபதியை தாக்கிய காவல்துறை அதிகாரிகளை தடுக்கச் சென்ற வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் சிலரையும் இருவரும் அடித்து காயப்படுத்தியதாக தெரியவந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட நீதிபதி தற்போது நலமுடன் இருப்பதாகவும், திடீர் தாக்குதல் சம்பவத்தால் அவர் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீதிபதி அவினாஷ் குமார், முன்னதாக சில வழக்குகள் சம்பந்தமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மீது கடுமையான கருத்துக்களையும் கூறியிருப்பதாக தெரிகிறது.

இதனிடையே நீதிபதி மீதான காவல்துறை அதிகாரிகளின் தாக்குதலுக்கு கோகர்திஹா பார் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. இது நீதித்துறையை முடக்க நடந்த முயற்சி என பார் கவுன்சில் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் மாவட்ட எஸ்.பியின் தலையீடு இருப்பதாகவும் சந்தேகம் தெரிவித்துள்ளனர். முன்னதாக கிரிமினல்களிடம் இருந்து பாதுகாப்பு கோருவோம், இனி போலீசாரிடம் இருந்தும் பாதுகாப்பு கோர வேண்டும் என பார் கவுன்சில் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

நீதிபதியை தாக்கி விவகாரத்தில் இரண்டு காவல்துறை அதிகாரிகளுடன், மாவட்ட எஸ்.பியின் பெயரையும் சேர்க்க வேண்டும் எனவும், இந்த வழக்கினை விரைவு நீதிமன்றத்தின் மூலம் விசாரித்து விரைவான நீதியை பெற்றுத்தராவிட்டால் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் பார் கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.