ராகுல் காந்தி தமிழகத்தில் பேசியது நிஜமானது! – அவரே வெளியிட்ட பதிவு
என் வார்த்தைகளை குறித்துவைத்துக் கொள்ளுங்கள் வேளாண் சட்டங்கள் விஷயத்தில் நான் சொல்வது நடக்கும் என தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் ராகுல் காந்தி பேசியது உண்மையாகியிருக்கிறது.
மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதாக இன்று பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ட்விட்டரில் இது நடக்கும் என முன்பே கூறிய வீடியோ ஒன்றை பகிர்ந்து தனது ஆருடம் உண்மையாகியிருப்பதை தெரிவித்துள்ளார்.
இன்று காலை 9 மணியளவில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்யபட்டிருப்பதாக அறிவித்தார். அத்துடன் போராட்டம் நடத்தும் விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு வீடு திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இதன் மூலம் கடந்த ஓராண்டாக நீடித்து வந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகள் அதிக அளவில் திரண்டு டெல்லி எல்லைகளில் அங்கேயே தங்கி போராடி வந்தனர். பின்னர் மத்திய அரசு புதிய சட்டங்களை திரும்பப் பெறும் வரையில் போராட்டம் தொடரும் என அறிவித்து பல மாதங்களாக போராடி வந்தனர். இதனிடையே தற்போது வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என அறிவிப்பு வெளியானதை விவசாயிகள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
விவசாயிகளின் நலனுக்காகவே மூன்று வேளாண் சட்டங்களையும் கொண்டுவந்தோம். ஆனால், அவர்களை சமாதானப்படுத்த முடியவில்லை என்பது வருத்தம் அளிப்பதாகவும் எனவே மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுகிறோம் எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இதனிடையே ராகுல் காந்தி கடந்த ஜனவரி மாதம் தமிழகம் வந்திருந்த போது செய்தியாளர்களிடையே பேசுகையில், என் வார்த்தைகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள், விவசாயத்துக்கு எதிரான சட்டங்களை அரசு திரும்பப் பெறும் நிலை ஏற்படும்’ என தெரிவித்திருந்தார். இந்த பேட்டியை அவர் கடந்த ஜனவரி மாதம் தேர்தல் பிரச்சாரத்திற்காக கொங்கு மண்டலம் வருகை தந்திருந்த போது அளித்திருந்தார். அப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவையும் ராகுல் காந்தி பகிர்ந்திருந்தார். தற்போது அந்த தனது பழைய ட்வீட்டை சுட்டிக்காட்டி அண்ணம் அளிப்பவர்கள் அவர்களின் சத்யாகிரகத்தால் அகம்பாவத்தை அடக்கியுள்ளனர். அநீதிக்கு எதிரான அவர்களின் வெற்றிக்கு வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த். விவசாயிகள் வாழ்க!” இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.