தென்னிந்திய அளவில் சாதனை படைத்த வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி…. மத்திய அரசின் தூய்மைக்கான தேசிய விருது
மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள நகரங்களுகிடையே 2006ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஸ்வச் சர்வேக்சன் என்னும் தூய்மை நகர போட்டி நடத்தி பல்வேறு விருதுகள் வழங்கி நகரங்களை ஊக்கப்படுத்தி வருகிறது. அது போல சிறப்பாக செயல் படும் மாநில அரசுக்கும் விருது வழங்கப்படுகிறது. அந்த வரிசையில் ஜூலை 2020 முதல் ஜூன் 2021 முடிய காலத்தில் இந்திய நகரங்களில் தூய்மை நகரமாக்க மேற்கொள்ளப் பட்ட முயற்சிகளை நேரடி ஆய்வு செய்து அந்த நகர மக்களின் கருத்து கேட்பு பெற்று தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டது.
தூய்மை நகரங்கள் போட்டி முடிவுகளை குடியரசுத் தலைவர் வெளியிட்டு பாராட்டு நிகழ்ச்சி புது டெல்லியில் இன்று நடைபெற்றது. ஸ்வச் அம்ருத் மகோத்சவ் விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தூய்மையான நகரங்கள் ஆறாவது ஆண்டின் போட்டி முடிவுகளை வெளியிட்டு வெற்றி பெற்ற நகரங்களை பாராட்டி உரையாற்றினார். மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி மற்றும் இணை அமைச்சர் கௌசல் கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குடியரசுத்தலைவர் அறிவித்த சர்வே முடிவுகளின் இந்திய நகரங்களில் மக்கள் தொகை 25000 எண்ணிக்கைக்கு குறைவான நகரங்கள் பிரிவில் வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி தமிழ்நாடு அளவில் முதல் இடமும் தென் இந்தியா அளவில் இரண்டாம் இடமும் பிடித்து அசத்தி உள்ளது.தொடர்ந்து வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சிக்கு தென் இந்தியாவின் சிறந்த தன் தனித்திறன் செயல்பாட்டு நகரம் விருதினை மத்திய அரசு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் துர்க்கா சங்கர் மிஸ்ரா வழங்க தூய்மை போட்டி நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய முந்தைய செயல் அலுவலர் கு.குகன் மற்றும் தற்போதைய செயல் அலுவலர் ஜெ. பிரகாஷ் இருவறும் பெற்றுக் கொண்டனர்.
தூய்மை நகர கணக்கெடுப்பு காலத்தில் பணி புரிந்த வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியின் முன்னாள் செயல் அலுவலர் கு.குகன் பணி காலத்தில் பணியாளர்கள் உழைப்பு மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் தூய்மையான நகரமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கு.குகன் பணி காலத்தில் கூடுதலான பணியாளர்களை ஊக்கமூட்டி நகர் முழுக்க தூய்மை செய்யப் பட்டதுடன் இயற்கை உரம் தயாரித்தல் , குப்பையில் வரும் தேங்காய் ஒடுகளில் மருந்து தயாரித்தல், பொது மக்கள் குப்பையில் ஆடைகள் வீசாமல் இருக்க பழைய துணிகளை சேகரித்து அனாதை இல்லங்களுக்கு அனுப்புதல், வீட்டில் உரம் தயாரிக்க விழிப்புணர்வு, மாடி தோட்ட போட்டிகள் , குப்பைகளை தரம் பிரித்து வரும் வருமானத்தில் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுமக்களின் தூய்மை குறித்த புகார்களை வாட்ஸப் மூலம் பெற்று தீர்த்து வைத்தல் என பல்வேறு முன்னோடி நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தார்.
இவர் இதற்கு முன் பணி புரிந்த நகரத்திலும் இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார் என்பதும் தற்போது தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டும் விருது பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.