தேர்தலை நடுநிலையாக நடத்த ஒத்துழைக்கவும் – அரசாங்க அதிபர்

எதிர்வரும்  பொதுத்தேர்தலை  நீதியாகவும் நேர்மையாகவும் நடுநிலைமையாகவும் நடாத்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்தெரிவித்தார்
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்
யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் யாவும் தற்போது பூரண படுத்தப்பட்டுள்ளன. இறுதிக் கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தேர்தலில் பங்குபற்றும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிகளும் எம்மால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்கள், கனிஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்கள், வலய தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்கள் மற்றும் விசேடமாக சுகாதாரநடைமுறை ஏற்பாடுகளை மேற்கொள்கின்ற உத்தியோகத்தர்களுக்குரிய பயிற்சிகளும் எம்மால்மேற் கொள்ளப்பட்டுள்ளன.
 மேலும் ஆளணி கட்டுப்பாடு , போக்குவரத்து ,மண்டப ஒழுங்கு மற்றும் நலன்புரி நடவடிக்கைகள் பொது வசதிகள் போன்ற சகல நடவடிக்கைகளும் அனேகமாக பூரணப் படுத்தப்பட்டுள்ளன. தற்போது இறுதி கட்ட நடவடிக்கைகளில்
நாங்கள் ஈடுபட்டிருக்கின்றோம். இந்த  பொதுத் தேர்தலில் சுமார் 7ஆயிரத்து 795 உத்தியோகத்தர்கள் யாழ் மாவட்டத்தில் தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ளார்கள் 508 வாக்கெடுப்பு நிலையங்களில்  வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
அதே போல இம் முறை வாக்கெண்ணும் நிலையங்கள் இரட்டிப்பாக்கப்படவுள்ளது.   89நிலையங்களில் இந்த வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது. அவற்றி 73 சாதாரண வாக்களிப்பு நிலையங்களும் 16 தபால்மூல வாக்கெண்ணும் நிலையங்களாக இந்த தடவை அமைத்திருக்கின்றோம் என்றார்

Comments are closed.