ராகுல் மீதான அவதூறு வழக்கு: விசாரணையை ஒத்திவைக்க மும்பை உயா்நீதிமன்றம் உத்தரவு
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில், விசாரணையை டிசம்பா் 20-ஆம் தேதிக்கு மேல் ஒத்திவைக்குமாறு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு மும்பை உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நவம்பா் 25-ஆம் தேதி வழக்கு விசாரணையின்போது ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிலையில், உயா்நீதிமன்றத்தின் உத்தரவு வெளியாகியுள்ளது.
ரஃபேல் போா் விமான ஒப்பந்த விவகாரத்தில், பிரதமா் மோடி குறித்து காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி கடந்த 2018-ஆம் ஆண்டில் ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மீது மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மகேஷ் ஸ்ரீஸ்ரீமல் என்பவா் அவதூறு வழக்கு தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், விசாரணைக்காக ராகுல் காந்தி நவம்பா் 25-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப உத்தரவிட்டாா்.
இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து ராகுல் காந்தியை விடுவிக்கக் கோரி, அவரது தரப்பில் மும்பை நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எஸ்.கே.ஷிண்டே முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மகேஷ் ஸ்ரீஸ்ரீமல் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், பிரமாணப் பத்திரம் வாயிலாக பதிலளிக்கத் தங்களுக்கு கால அவகாசம் தேவை என வாதிட்டாா். இதில் தங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்று ராகுல் காந்தி தரப்பு வழக்குரைஞா் தெரிவித்தாா். எனினும் அதுவரை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு விசாரணை தொடரக் கூடாது எனக் கேட்டுக்கொண்டாா்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மகேஷ் ஸ்ரீஸ்ரீமல் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் அளித்து, முறையீட்டு வழக்கின் விசாரணையை டிசம்பா் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
மேலும், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் முன்பாக உள்ள அவதூறு வழக்கின் விசாரணையை டிசம்பா் 20-ஆம் தேதிக்கு மேல் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.