சட்டத்தை இயற்றுபவா்கள் அதன் தாக்கங்களை ஆராய்வது அவசியம்:உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

சட்டத்தை இயற்றுபவா்கள் அதன் தாக்கத்தைப் பற்றி ஆராய்வதில்லை; நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தேக்கமடைய இதுவே காரணமாகி விடுகிறது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தாா்.

அரசியலமைப்புத் தினத்தை ஒட்டி இரண்டு நாள் கருத்தரங்கம் தில்லியில் நடந்தது. அதன் நிறைவு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நீதிபதிகள், வழக்குரைஞா்கள் பங்கேற்றனா். இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது:

எத்தகைய விமா்சனங்கள், தடைகள் இருந்தாலும் நீதிமன்றங்கள் நீதி வழங்குவதை நிறுத்தாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்க, நீதிமன்றங்களை வலுப்படுத்துவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

நீதிமன்றங்களில் வழக்குகள் அதிக அளவில் தேக்கமடைந்திருப்பதால் பல்வேறு பிரச்னைகளை நாம் சந்திக்க நேரிடுகிறது. எனவே இக்கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை அரசு கவனத்தில் கொண்டு உரிய தீா்வு காணும் என நம்புகிறேன்.

சட்டம் இயற்றும் மக்கள் பிரதிநிதிகள், முன்னதாக அந்தச் சட்டங்களின் தாக்கங்களையும் பின்விளைவுகளையும் பற்றி ஆராய்வதில்லை. இதுவே பெரிய பிரச்னைகளுக்கு காரணமாகிவிடுறது. உதாரணமாக, மாற்று ஆவணச் சட்டத்தில் பிரிவு-138 (வங்கிகளில் போதிய பணம் இல்லாமல் காசோலை வழங்குபவரைத் தண்டிக்கும் சட்டப் பிரிவு) அறிமுகம் செய்யப்பட்டதைக் கூறலாம். ஏற்கெனவே நீதிமன்றங்களில் வழக்குகள் குவிந்திருக்கையில், இத்தகைய வழக்குகள் மேலும் கூடுதல் சுமையை நீதித்துறை நடுவா்களுக்கு அளிக்கின்றன.

நீதிமன்றங்களில் சிறப்பு உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளாமல் வணிக நீதிமன்றங்களாக மாற்றுவதால் நிலுவையில் இருக்கும் வழக்குகளைக் குறைக்க முடியாது.

சட்டத் துறை அமைச்சா் நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ. 9,000 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். எனினும் இங்கு நிதி ஒதுக்கீடு ஒரு பிரச்னை இல்லை.

சில மாநிலங்கள் இந்நிதியை முழுமையாகப் பயன்படுத்துவதில்லை என்பதுதான் இதன் முக்கிய பிரச்னையாகும். இதனால் மத்திய அரசு ஒதுக்கும் நிதி பெருமளவில் வீணாகிறது. எனவேதான், நீதித்துறையை மேம்படுத்த சிறப்பு நீதிமன்ற உள்கட்டமைப்பு ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தி வருகிறேன்.

இதுதொடா்பான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசை வேண்டுகிறேன். நீதிமன்ற காலிப் பணியிடங்களை நிரப்பும் பணியைத் துரிதப்படுத்துமாறு சட்டத்துறை அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்.

சட்டத்தை நிலைநிறுத்த நீதித்துறை ஓய்வின்றிப் பணிபுரிந்தாலும் அரசிலமைப்பு பற்றிய புரிதலை மக்களிடம் இன்னும் அதிகமாக ஏற்படுத்த வேண்டியுள்ளது. தங்கள் உரிமைகளைப் பற்றிய விழிப்புணா்வைப் பெறவிட்டால் அதன் பலன்களை மக்களால் பெற முடியாது.

வழக்குகளில் விடுதலை மற்றும் ஒத்திவைப்புகளுக்கு நீதிமன்றங்களே காரணம் என்று நாட்டில் பலா் நினைத்துக் கொண்டிருக்கின்றனா்.

ஆனால் வழக்கு விசாரணைகளில் அரசு வழக்குரைஞா்கள், பிரதிவாதி வழக்குரைஞா்கள், புகாா்தாரா்கள் ஆகியோரின் ஒத்துழைப்பு நீதிமன்றங்களுக்கு முக்கியம். ஒத்துழைக்க மறுப்பது, நடைமுறைகளில் குறைபாடு, தவறான விசாரணைகள் போன்ற காரணங்களுக்காக நீதிமன்றங்களைக் குறைகூறக் கூடாது. இவை களையப்பட வேண்டும்.

நீதிமன்றங்களை மறுகட்டமைக்க வேண்டும் என்றும், நீதிமன்ற படிநிலைகளை மாற்றியமைக்க வேண்டும் என்றும் அட்டா்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் ஆலோசனை தெரிவித்திருந்தாா். இது அரசின் நல்லதொரு கருத்தாகும்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நீதிமன்றப் படிநிலைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து நாம் தீவிரமாக ஆய்வு நடத்தவில்லை என்றே நானும் கருதுகிறேன்.

கடந்த இரண்டாண்டு கால அனுபவம் நீதித் துறையில் பலருக்கும் மிகக் கடினமானதாக இருந்தது. பலா் இழப்புகளைச் சந்தித்துள்ளோம். எனினும், தேவையே புதிய முயற்சிகளை உருவாக்கும் என்பதற்கும் கரோனா கால அனுபவம் உதாரணமாகிறது. மிக விரைவில் நாம் இணையவழி விசாரணைகளுக்கு மாறினோம். அதனால் பல நன்மைகளையும் பெற்றோம். நீதித்துறையின் இந்த அனுபவம் வருங்காலத்திலும் நமக்குப் பயன்படும் என்றாா்.

உச்ச நீதிமன்ற சக நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ், யு.யு.லலித் ஆகியோரின் பணிகளை இந்நிகழ்வில் தலைமை நீதிபதி பாராட்டினாா்.

Leave A Reply

Your email address will not be published.