கோவிஷீல்டு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் : சீரம் நிறுவனம் விண்ணப்பம்
ஒமைக்ரான் தொற்று உலகம் முழுவதும் 23 நாடுகளில் பரவியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்த அனுமதிக்க கோரி இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சீரம் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ், பல்வேறு நாடுகளிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்த சூழலில், வைரஸ் பரவலை தடுக்க பூஸ்டர் டோஸ் பற்றி விரைந்து முடிவெக்கக்கோரி கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்கள் மத்திய அரசை வலியுறுத்தின.
இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனம், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் விண்ணப்பம் அளித்துள்ளது. அதில், நாட்டில் தடுப்பூசி போதுமான அளவு இருப்பில் உள்ளதாகவும், புதிய வகை வைரஸ் காரணமாக பூஸ்டர் டோஸ் தேவை என்றும் கூறியுள்ளது.
இந்நிலையில், உலகம் முழுவதும் 23 நாடுகளில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
மேலும், 5 கண்டங்களைச் சேர்ந்த நாடுகளில் ஒமைக்ரான் தொற்று தற்போது பதிவாகியுள்ளது எனவும், இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் டெட்ரோஸ் அதானோம் கவலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.