இந்தியா-நியூசிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மும்பையில் இன்று தொடங்குகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கான்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து போராடி ‘டிரா’ செய்தது. இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
முதலாவது டெஸ்டில் ஓய்வில் இருந்த இந்திய கேப்டன் விராட் கோலி அணிக்கு திரும்பியுள்ளார். அவரது வருகையால் அணியில் இருந்து நீக்கப்படுவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் அவரது இடத்தில் கான்பூர் டெஸ்டில் அறிமுக வீரராக இடம் பிடித்த ஸ்ரேயாஸ் அய்யர் 105 மற்றும் 65 ரன்கள் வீதம் நொறுக்கி அசத்தினார். அறிமுக டெஸ்டிலேயே ஸ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்து சாதனை படைத்து விட்டதால் அவரை ஓரங்கட்ட முடியாது.
மூத்த வீரர்கள் அஜிங்யா ரஹானேவும், புஜாராவும் சமீப காலமாக ரன் எடுக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். ஆனால் அனுபவசாலிகளான அவர்களுக்கு அணி நிர்வாகம் ஆதரவாக இருக்கிறது. ஒரு இன்னிங்சில் ரன் சேர்த்து விட்டால் பார்முக்கு திரும்பி விடுவார்கள் என்று பயிற்சியாளர் டிராவிட் சொல்கிறார். அதனால் இப்போது தொடக்க வீரர் மயங்க் அகர்வால் மீது பார்வை திரும்பியுள்ளது. அவரது பேட்டிங்கும் பெரிய அளவில் இல்லை. இதனால் அவர் நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
முதலாவது டெஸ்டின் போது கழுத்து வலியால் அவதிப்பட்ட விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா அதில் இருந்து குணமடைந்து விட்டதாக கேப்டன் கோலி நேற்று தெரிவித்தார். இருப்பினும் அவருக்கு ஓய்வு கொடுத்து விட்டு மாற்று விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத்தை சேர்க்கலாமா? என்பது குறித்தும் அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது. கே.எஸ்.பரத் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக ஆடியிருக்கிறார். ஒரு வேளை அவரை சுப்மான் கில்லுடன் இணைத்து தொடக்க வீரராக விளையாட வைத்தால், ரஹானே, புஜாரா ஆகியோரது இடத்துக்கு ஆபத்து விலகிவிடும்.
வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவின் பந்துவீச்சு முதலாவது டெஸ்டில் எடுபடவில்லை. இதனால் அவருக்கு பதிலாக முகமது சிராஜ் இடம் பெறலாம். ஆடும் லெவனில் யார்-யார் இடம் பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கான்பூர் டெஸ்டில் வெற்றியின் விளிம்புக்கு வந்து கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்தியா கோட்டை விட்டது. பொறுப்பு கேப்டன் ரஹானே கடைசி 2 மணி நேரத்தில் வேகப்பந்து வீச்சை பயன்படுத்தாதது விமர்சனத்திற்கு உள்ளானது. அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல் ஆகியோர் சரமாரியாக சுழல்ஜாலத்தை தொடுத்த போதிலும் நியூசிலாந்தின் கடைசி கட்ட பேட்ஸ்மேன்கள் சமாளித்து தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றி விட்டனர்.
இதே போல் முதலாவது இன்னிங்சில் இந்தியாவின் ரன் குவிப்பும் திருப்திகரமாக இல்லை. குறைந்தது 400 ரன்களுக்கு மேல் எடுத்தால் தான் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும். இந்த விஷயத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சதத்தை ருசித்து 2 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. சதம் ஏக்கத்தை அவர் தணிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
நியூசிலாந்து அணியை பொறுத்தவரை கடைசி 10 டெஸ்டுகளில் அந்த அணி தோல்வியையே சந்திக்கவில்லை. கான்பூர் டெஸ்டில் தோல்வியில் இருந்து தப்பியது அவர்களுக்கு நிச்சயம் நம்பிக்கை கொடுத்திருக்கும். தொடக்க ஆட்டக்காரர்கள் டாம் லாதம், வில் யங் ஆகியோர் வலுவான தொடக்கம் தந்த போதிலும் கேப்டன் கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஆகிய சீனியர் பேட்ஸ்மேன்கள் முந்தைய டெஸ்டில் ஜொலிக்கவில்லை. இவர்களும் மிரட்டினால் அது இந்திய பவுலர்களுக்கு இன்னும் சவாலாக அமையும்.
மும்பையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் ஆடுகளம் ஈரப்பதமாக இருக்கிறது. புற்களும் ஓரளவு இருப்பதால் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உகந்த வகையில் பவுன்சும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த அணி 3-வது வேகப்பந்து வீச்சாளராக நீல் வாக்னெரை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கிறது. சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் மும்பையில் பிறந்து வளர்ந்து, அதன் பிறகு நியூசிலாந்துக்கு இடம் பெயர்ந்தவர். இப்போது சொந்த ஊரில் உள்ளூர் அணியை எதிர்த்து களம் இறங்குவது அவருக்கு வித்தியாசமான உணர்வை அளிக்கும்.
மொத்தத்தில் இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இரு அணி வீரர்களும் வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பது நினைவு கூரத்தக்கது.
போட்டி நடக்கும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இந்திய அணி இதுவரை 25 டெஸ்டுகளில் விளையாடி அதில் 11-ல் வெற்றியும், 7-ல் தோல்வியும், 7-ல் டிராவும் கண்டுள்ளது.
நியூசிலாந்து அணி இங்கு 2 டெஸ்டுகளில் விளையாடி ஒன்றில் வெற்றியும் (1988-ம் ஆண்டில் 136 ரன் வித்தியாசத்தில் வெற்றி), மற்றொன்றில் தோல்வியும் (1976-ம் ஆண்டில் 162 ரன் வித்தியாசத்தில் தோல்வி) சந்தித்துள்ளது. 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 631 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும்.
போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-
இந்தியா: சுப்மான் கில், மயங்க் அகர்வால் அல்லது ரஹானே, புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சஹா அல்லது கே.எஸ்.பரத், அஸ்வின், அக்ஷர் பட்டேல், முகமது சிராஜ், உமேஷ் யாதவ்.
நியூசிலாந்து: வில் யங், டாம் லாதம், வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், டாம் பிளன்டெல், ரச்சின் ரவீந்திரா, கைல் ஜாமிசன், டிம் சவுதி, அஜாஸ் பட்டேல், சோமர்வில் அல்லது நீல் வாக்னெர்.