ஓய்ந்துவிடமாட்டேன்… அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா வெளியிட்டுள்ள திடீர் அறிக்கை!
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் வரவுள்ள நிலையில், அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவே முற்றிலும் மாறிபோய்விட்டது. சசிகலா, பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி என்று ஒன்றாக இருந்த இவர்களில் சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் சசிகலாவை அதிமுக-வில் இருந்து முற்றிலும் ஒதுக்கிவிட்டனர்.
அதன் பின் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா சில காலம் அமைதியாக இருந்தார். நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுக தோல்விக்கு பின் மீண்டும் அதிமுக-வில் நுழைய பல முயற்சிகளை சசிகலா மேற்கொண்டு வருகிறார்.
அதற்கு ஏற்றவகையில் சசிகலாவிற்கும் அதிமுக-வில் ஆதரவு கூடி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக பேசியதற்காக கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கப்பட்டார்.
சசிகலாவுக்கு ஆதரவானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளான வரும் டிசம்பர் 5-ஆம் திகதி மெரினாவில் உள்ள அவரின் நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி செலுத்த உள்ளார்.
இதில் தொண்டர்கள் பெரும் அளவில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொண்டர்களின் உழைப்பாலும் தியாகத்தாலும் உருவான இயக்கம் அதிமுக. எத்தனையோ தடைகளை தாண்டி வந்த இயக்கம்.
அதே போல ஜெயலலிதாவும் எத்தனையோ தடைகளை தாண்டி வந்தவர். அவர் வழியில் எதிரிகளின் சூழ்ச்சிக்கு இரையாகாமல் அதிமுகவின் வளர்ச்சிக்காகவும், வெற்றிக்காகவும் இந்த நொடி வரை பாடுபட்டு வருகிறேன்.
இன்றைய நிலையை பார்க்கும் போது இதற்காகவா நம் இருபெரும் தலைவர்கள் கழகத்தை காப்பாற்றினார்கள் என நினைத்து தொண்டர்கள் வேதனைப்படுகிறார்கள். என்றைக்கு தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு இயக்கம் பயன்பட்டதோ அன்றிலிருந்து அதன் மதிப்பு குறைந்தது.
இன்றும் எத்தனையோ தொண்டர்களும், நிர்வாகிகளும் கழகம் பழைய நிலைக்கு திரும்பி வரவேண்டும் என நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறர்கள். உங்கள் நம்பிக்கை கண்டிப்பாக வீண் போகாது.
தைரியமாக இருங்கள். நம் இயக்கத்தை சரி செய்து பழையபடி நம் தலைவர்கள் வகுத்த சட்டத்திட்டங்களின்படி செயல்பட வைத்து எதிரிகளின் கனவுகளையும் தகர்த்து, அதிமுகவைச் சேர்ந்தவன் என பெருமையோடும், மிடுக்கோடும் சொல்லிக்கொள்ளும்படி விரைவில் மாற்றிக்காட்டுவோம்.
அண்மைக்காலமாக எவ்வித காரணமும் இன்றி காழ்புணர்சியின் பொருட்டு உதாசீனப்படுத்தப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் தாங்களாக ஒதுங்கிக் கொண்டவர்கள் அனைவரும் கவலைப்படாமல் சிறிது காலம் பொருத்திருங்கள்.
உங்கள் மக்கள் பணிகளை தொடருங்கள். விரைவில் அதிமுகவின் நிலை மாறும், தலை நிமிறும், இது உறுதி. என் உயிர் மூச்சு உள்ளவரை எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் தொண்டர்களின் இயக்கமாக அதிமுக மாறும் வரை நான் உழைத்துக் கொண்டே இருப்பேன், ஓய்ந்து விடமாட்டேன் என உறுதி கூறுகிறேன் இவ்வாறு சசிகலா கூறியுள்ளார்.