நாட்டை இருளில் தள்ள மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தயார்!
மின் உற்பத்தி நிலையங்களில் பணியாற்றும் பொறியியலாளர்களும், எதிர்காலத்தில் தற்போது செய்யும் கடமைகளிலிருந்து நீக்கப்படுவார்கள் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கையின் போதும் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் இயங்குதளங்களின் பொறியியலாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும் , அடுத்த கட்டமாக அவர்களும் பணிகளிலிருந்து நீக்கப்படுவார்கள் என பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.
மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையானது படிப்படியாக தீவிரப்படுத்தப்பட்டு, இறுதியில் வேலைநிறுத்தம் செய்யப்படும் வரை செல்லும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் , நாடு முழுவதும் இருளில் மூழ்கிவிடும் என்றார் அவர்.
நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கொழும்பு, காலி, மாத்தறை உள்ளிட்ட நாட்டின் பல மாவட்டங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே இலங்கை மின்சார சபை , மீண்டும் மின்சாரத்தை வழங்கி வழமைக்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவித்துள்ளது.