ஓபிஎஸ், இபிஎஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரைத் தவிர வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் கடந்த 2ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை வாக்கு மூலம் தேர்வு செய்யும் வகையில் விதிகள் திருத்தப்பட்டன.
அதிமுக உட்கட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதற்கிடையே, ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு மனு வாங்க வந்த சிலரை தொண்டர்கள் விரட்டியடித்த சம்பவமும் அரங்கேறியது.
நேற்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்ற நிலையில், இருவரது மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யாததால், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு, அதற்கான அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.