ஐரோப்பா முழுவதும் கட்டாயமாக்கப்படும் தடுப்பூசி?: சண் தவராஜா
சுவிசில் கொவிட் தடுப்பூசிச் சான்றிதழை எதிர்ப்பவர்களால் , அழைப்பு விடுக்கப்பட்ட மக்கள் வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்திருக்கின்றது.
சுவிஸ் அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் திட்டங்களை ஆதரித்து 62 விழுக்காடு மக்களும்,
எதிர்த்து 38 விழுக்காடு மக்களும் வாக்களித்திருக்கின்றார்கள்.
65.7 விழுக்காடு மக்கள் கலந்து கொண்டிருந்த இந்த வாக்களிப்பில் சுவிஸ் நாட்டின் 26 மாநிலங்களில் 24 மாநிலங்கள் அரசின் திட்டங்களை ஆதரித்து வாக்களித்திருந்தன.
பழமைவாத மாநிலம் எனக் கருதப்படும் சுவிற்ஸ் மற்றும் சிறிய மாநிலமான அப்பென்செல், இன்னர் ரோடன் ஆகியவை எதிராக வாக்களித்திருந்தன.
அப்பென்செல் இன்னர் ரோடன் மாநிலத்தில் 55.8 விழுக்காடு மக்களும் சுவிற்ஸ் மாநிலத்தில் 51.4 விழுக்காடு மக்களும் தமது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தனர்.
அதேவேளை, சிறிய மாநிலமான பாசல் நகரில் ஆகக் கூடுதலாக 70.6 விழுக்காடு மக்கள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.
ஜனநாயக அடிப்படையிலான வாக்கெடுப்பின் முடிவைத் தாம் ஏற்றுக் கொள்ளுவதாகத் தெரிவித்த போதிலும், தமது கொள்கை முடிவில் இருந்து ஒருபோதும் மாறப் போவதில்லை என தடுப்பூசிச் சான்றிதழுக்கு எதிரானவர்கள் ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
மறுபுறம், வாக்கெடுப்பில் கிடைத்த வெற்றியைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு மென்மேலும் அடக்குமுறை(?)ச் சட்டங்களை அறிமுகம் செய்வதில் அரசு ஆர்வம் காட்டக்கூடாது என்ற கருத்தையும் பதிவு செய்திருந்தனர்.
நடைபெற்று முடிந்த வாக்கெடுப்புக்கு முந்திய காலகட்டம் சுவிஸ் சமூகம் கொரோனாத் தடுப்பூசி விடயத்தில் எத்தனை தூரம் ஆழமாகப் பிளவுண்டு கிடக்கின்றது என்பதைப் புலப்படுத்துவதாக அமைந்திருந்தது. தடுப்பூசிக் கொள்கைக்கு எதிராகப் பரவலாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் வன்முறை மோதல்களிலேயே முடிந்திருந்தன. பொதுவில் ஜனநாயக உரிமைகளை மதித்துக் கொண்டாடும் சுவிஸ் மக்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைத் திட்டித் தீர்த்ததை பெரிதும் அவதானிக்க முடிந்தது. நடைபெற்றுமுடிந்த மக்கள் வாக்கெடுப்பில் வழக்கத்தை விடவும் அதிக மக்கள் கலந்துகொண்டு வாக்களித்தமைக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான மக்களின் வெறுப்பும் ஒரு காரணம் எனப் பேசப்படுகின்றது.
இதேவேளை ஐந்தாவது அலைத் தாக்குதல் என வர்ணிக்கப்படும் கொரோனாத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் சுவிஸ் அரசாங்கம் திணறுவதைப் பார்க்க முடிகின்றது. கடந்த அக்டோபர் மாதம் முதலே அதிகரித்துவரும் கொரோனாத் தொற்று தற்போது தினசரி எண்ணாயிரத்தை எட்டியுள்ளது. புதிதாக, திரிபடைந்த ஒமைக்ரோன் வகைத் தொற்றுப் பீதியும் இணைந்து மக்களை திகிலடையச் செய்துள்ளது.
யனவரி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம் என்ற அறிவிப்பை கிரேக்கம் விடுத்துள்ளது. ஏலவே, நாட்டு மக்கள் அனைவருக்கும் பெப்ரவரி முதல் தடுப்பூசி கட்டாயம் என்ற அறிவிப்பை ஆஸ்திரியா உலகில் முதல்நாடாக வெளியிட்டிருந்தமை தெரிந்ததே. யேர்மனியில் அடுத்துப் பதவியேற்கவுள்ள தலைமை அமைச்சரான ஒலாப் சோல்ஸ், தடுப்பூசியைக் கட்டாயமாக்கும் திட்டத்துக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். அதேவேளை, “ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தடுப்பூசியைக் கட்டாயமாக்குவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்” என ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவி ஊர்சுலா வொன் டெர் லெயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஓமைக்ரோன் திரிபு தொடர்பில் உறுப்பு நாடுகள் பயணத் தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் அவரின் கருத்து முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகின்றது.
இந்நிலையில், தடுப்பூசியைக் கட்டாயமாக்கும் அறிவிப்பு சுவிஸ் அரசாங்கத்திடமிருந்தும் வெளிவருமோ என்ற அச்சம் ஒரு சாராரிடம் ஏற்பட்டிருக்கின்றது.
ஐரோப்பாக் கண்டத்தில் இத்தாலியில் 73 விழுக்காடு மக்களும், பிரான்சில் 69 விழுக்காடு மக்களும், யேர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் 68 விழுக்காடு மக்களும் இரண்டு தடவை தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்கள். அடுத்த இடத்தில் சுவிஸ் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில்; 65 விழுக்காடு மக்களே இதுவரை இரண்டு தடவையில் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளனர். தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் பல செயல்திட்டங்களை சுவிஸ் அரசாங்கம் தேசிய மட்டத்திலும், மாநில மட்டங்களிலும் முன்னெடுத்த போதிலும் அவை ஒரு கட்டத்திற்கு மேலே நகர்வதாகத் தெரியவில்லை.
சுவிஸ் நாட்டில் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 26 முதல், பாரதூரமான நோயாளிகளும், 65 வயதுக்கு மேற்பட்டோரும் ‘பூஸ்டர்’ எனப்படும் மேலதிக தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. நவம்பர் 23இல் இந்த நடைமுறையில் கொண்டுவரப்பட்ட திருத்தம் 16 வயதுக்கு மேற்பட்ட யாவரும் ‘பூஸ்டர்’ தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வழி செய்துள்ளது.
8.6 மில்லியன் மக்கள் வாழும் நாட்டில் 36 மில்லியன் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மொடேர்னா, பைசர் மற்றும் யோன்சன் ஆகிய தடுப்பூசிகளே தற்போதுவரை பாவனையில் உள்ள நிலையில், பைசர், மொடேர்னா, அஸ்ட்ரா செனேக்கா, கியோர்வக் மற்றும் நோவாவக்ஸ் ஆகிய தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஒமைக்ரோன் திரிபு வேகமாகப் பரவப் பரவ ஐரோப்பிய நாடுகளில் அடுத்தடுத்து இறுக்கமான நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதை ஊகிக்க முடிகின்றது. இறுக்கமான நடைமுறைகளை அறிமுகம் செய்வதில் அரசாங்கங்களுக்குத் தயக்கம் இருந்தாலும், சுவிஸ் மக்கள் வாக்கெடுப்பின் முடிவுகள் அவற்றுக்கு ஒரு புதிய தெம்பை வழங்கியிருக்க வாய்ப்பு உள்ளது.
அதேவேளை, ஐரோப்பிய மண்ணில் எத்தகைய இறுக்கமான நடைமுறைகளை அறிமுகம் செய்தாலும், கொரோனாப் பெருந் தொற்றைக் கட்டுப்படுத்திவிட முடியுமா என்னும் ஐயம் எழவே செய்கிறது. கொரோனா என்பது நாடுகளின் எல்லைகளுக்குள் கட்டுப்பட்டுவிடக் கூடிய ஒரு நோய் அல்ல. மாறாக, அது எல்லைகளைக் கடந்து பரவக் கூடியது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்ட பின்னரும் இன்னமும் நாடுகளின் எல்லைகளுக்குள் அதனைக் கட்டுப்படுத்திவிட நினைப்பது அறிவிழிவே அன்றி வேறல்ல. ஆனால், மேற்குலகு அதனைப் புரிந்து கொள்வது போலத் தெரியவில்லை.
இன்றைய நிலையில் தடுப்பூசி விநியோகத்தை உலக அளவில் பரவலாக்கி அனைத்து மக்களும் அவற்றைப் பெற்றுக் கொள்வதை உறுதி செய்வதே ஓரளவுக்கேனும் கொரோனா அபாயத்திலிருந்து விடுபடுவதற்கான ஒரே மார்க்கம். ஆனால், துர்வாய்ப்பாக மேற்குலகின் சிந்தனையில் தனது நாட்டு மக்களின் உயிர்கள் மாத்திரமே மேலானவை என்ற சிந்தனையே நீடித்து வருகின்றது.
மறுபுறம், அனைத்து வகையான திரிபுகளையும் கட்டுப்படுத்தக் கூடிய தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளமை ஆறுதல் தரும் செய்தியாக உள்ளது. தொடங்கிய இடத்தில்தான் கொரோனாத் தீநுண்மிக்கு முடிவுரை எழுதப்பட உள்ளதோ என்னவோ?