இவற்றை செய்யாவிட்டால் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படும் : இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை
கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காவிடில் இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்படும் என இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரித்துள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாகிவிட்டதாக அந்நாட்டு சுகாதாரச் செயலர் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்றால் கர்நாடகத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர் பாதிக்கப்பட்டார். அவர் அத்தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் , பரிசோதனையில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு துபாய் சென்றுவிட்ட மற்றொரு நபர் மீது பெங்களூரூ போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில், ஒமைக்ரானால் மற்றொரு அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரித்துள்ளது. எனவே முன்களப்பணியாளர்களுக்கும் நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை கேட்டுக்கொண்டுள்ளது. 12 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
மாநிலங்களில் ஒமைக்ரான் திரிபு பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், பெருந்தொற்றிலிருந்து நாடு மீண்டு கொண்டிருக்கும் நிலையில், இது பெரும் பின்னடைவாகும் எனவும் மருத்துவ கவுன்சில் கவலை தெரிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காவிட்டால் மிகப்பெரிய மூன்றாவது அலை ஏற்படும் என்றும் ஐஎம்ஏ எச்சரித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 23 பேருக்கு ஒமைக்ரான் திரிபு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில் கர்நாடகாவில் 2 பேருக்கும் மகாராஷ்டிராவில் 10 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் 9 பேரும் டெல்லி மற்றும் குஜராத்தில் தலா ஒருவரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு, ஷிவமொக்கா, ஹுப்பள்ளி, மங்களூரு மற்றும் விஜயபுரா மாவட்டங்களில் மரபணு வரிசைமுறை ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருவதாக அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து அண்மையில் மகாராஷ்டிரா திரும்பியவர்களில் சுமார் 100 பேரை காணவில்லை என தானே மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நூறுபேரில் சிலர் போலியான முகவரிகளை கொடுத்துள்ளதாகவும், சிலரின் செல்போஃன்கள் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளது.
இதனிடையே இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாகத் தொடங்கிவிட்டதாக அந்நாட்டு சுகாதாரச் செயலர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் கடந்த ஞாயிறு வரை 90 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது. இந்த எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 336 ஆக உயர்ந்தது. இது குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ள சஜித் ஜாவித், வெளிநாடு செல்லாத பிரிட்டன் மக்களுக்கும் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகத்தில் பரவியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பொது இடங்களில் செல்வோருக்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் பிரிட்டன் வருவோர் 10 நாட்கள் கட்டாயத் தனிமையில் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.