சபையில் இடம்பெற்ற சம்பவங்கள்: விசாரணைக்கு 11 பேரடங்கிய குழு.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கும், பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தலைமையில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று இந்த அறிவிப்பை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்களுக்கான காரணங்களைக் கண்டறிவதற்கும், எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்குமே இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குழுவில் இடம்பெற்றுள்ள எம்.பிக்களின் விபரம் வருமாறு:-
சமல் ராஜபக்ச, பந்துல குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, சுசில் பிரேமஜயந்த, கயந்த கருணாதிலக, ரவூப் ஹக்கீம், அநுரபிரியதர்சன யாப்பா, விஜத ஹேரத், ரஞ்சித் மத்தும பண்டார, எம்.ஏ. சுமந்திரன்.
தமது கட்சி உறுப்பினரான மனுஷ நாணயக்கார மீது தாக்குதல் நடத்துவதற்கு முற்பட்ட ஆளுங்கட்சியினர் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும் ஐக்கிய மக்கள் சக்தியினர் கடந்த இரு நாட்கள் (திங்கள், செவ்வாய்) சபை அமர்வைப் புறக்கிணித்திருந்தனர்.
சபாநாயகரிடமிருந்து உரிய பதில் கிடைக்கும்வரை சபை அமர்வுகளில் பங்கேற்கமாட்டோம் எனவும் அவர்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், பாராளுமன்றத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான குழுவை சபாநாயகர் இன்று நியமித்துள்ளார்.
இதற்கமைய சபை அமர்வில் ஐக்கிய மக்கள் சக்தியினர் இன்று பங்கேற்றனர்.