பிபின் ராவத் மறைவு: அமெரிக்க ராணுவ மந்திரி இரங்கல்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
ஹெலிகாப்டரில் பயணம் செய்த கேப்டன் வருண் சிங், 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு அமெரிக்க ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் உயிரிழந்தது தொடர்பாக, ராவத் குடும்பத்தினருக்கும், இந்திய ராணுவத்தினருக்கும், இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜெனரல் ராவத், அமெரிக்க-இந்தியா பாதுகாப்பு கூட்டாண்மையின் ஒரு அழியாத முத்திரையை பதித்தார். மேலும் இந்திய ஆயுதப்படைகளை கூட்டாக ஒருங்கிணைக்கப்பட்ட போர் அமைப்பாக மாற்றும் இடத்தில் இருந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவரைச் சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவரை அமெரிக்காவின் மதிப்புமிக்க கூட்டாளியாகவும் நண்பராகவும் பார்த்தேன்.
எங்களின் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் ராவத் குடும்பத்தினருடனும், விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருடனும் உள்ளன. அவரது இந்த இழப்பால் நாங்கள் மிகவும் வருந்துகிறோம்” என்று லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார்.