சண்டீகரிலிருந்து 2,500 கி.மீ. பயணித்து சென்னை நபரின் உயிர்காத்த இதயம்
உடல் உறுப்பு தானத்தில், மற்றுமொரு புதிய சாதனையாக, சண்டீகரிலிருந்து சுமார் 2,500 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணித்து வந்த இதயம், சென்னையில் இதய நோயாளிக்குப் பொருத்தப்பட்டுள்ளது.
சண்டீகரில் உள்ள மருத்துவமனையில் மூளைச்சாவடைந்த நபரின் இதயம் தானமாக பெற்றப்பட்டு, மருத்துவமனையிலிருந்து 22 நிமிடத்தில் மொஹாலி விமான நிலையத்துக்கு வந்தடைந்தது. இதற்காக, மருத்துவமனை – விமான நிலையப் பாதை முழுக்க போக்குவரத்து மாற்றப்பட்டிருந்தது. புதன்கிழமை பிற்பகல் 3.25 மணிக்குப் புறப்பட்ட விமானத்தில் வந்த இதயம், சென்னைக்கு இரவு 8.30க்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, இதயம் பாதித்து சிகிச்சை பெற்று வந்த 52 வயது நபருக்கு பொருத்தப்பட்டது.
கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட மற்ற உறுப்புகள் அனைத்தும் சண்டிகரில் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு பொறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவமனை இயக்குநர் சுர்ஜித் சிங் கூறுகையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட நபரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்த அவரது குடும்பத்தினருக்கு முதலில் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் சென்னையில் இதயம் பெற்றவர் உள்பட 6 பேருக்கு உயிர்காக்கப்பட்டுள்ளது என்றார்.