மதுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பொது இடத்தில் அனுமதியில்லை – ஆட்சியர் அதிரடி
மதுரை மாவட்ட ஆட்சியர் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பின் ஒரு அங்கமாக மதுரை மாவட்டம் முழுவதுமுள்ள வாக்குச் சவாடிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள் ஆகிய இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் ஒவ்வொரு சனிக்கிழமை நாட்களில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவருகிறது.
1939 வருடத்திய பொது சுகாதார சட்டத்தின்படி கொரோனா நோய் பட்டியலிடப்பட்ட தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்படி சட்டப்பிரிவு 71 (1)-ன் படி, இனிவரும் காலங்களில் பொதுமக்கள் நலன்கருதி மேற்படி தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்கள் என சந்தைகள், திரையரங்குகள், பொழுதுபோக்கு இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், விளையாட்டு மைதானங்கள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், சத்திரம் லாட்ஜ்கள், கேளிக்கை விடுதிகள், டாஸ்மாக் பார்கள், ஆம்னி பேருந்துகள், தொழிற்சாலைகள், கடைகள், வணிகள நிறுவனங்கள் ஆகிய பொது இடங்களுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மேற்படி, நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு வணிக நிறுவனத்திலும் வாடிக்கையாளர் வருகை குறித்து பதிவேடு பராமரித்து அதில் அவ்வாடிக்கையாளர் தடுப்பூசி செலுத்தியுள்ள விவரம் பதிவு செய்து வர கேட்டுக்கொள்ளப்பட்டது. தடுப்பூசி செலுத்தாதவர்கள் வருகை புரியும் பட்சத்தில் அவர்களை வணிக வளாகத்தில் அனுமதிக்காமல் அருகையில் உள்ள தடுப்பூசி முகாம் விவரத்தினை தெரிவித்து தடுப்பூசி செலுத்திய பின்னர் அதனை உறுதி செய்து அனுமதிக்க கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இதில், அரசு ஊழியர்களும் அடங்கும். அதனை கண்காணிக்கப் பலதுறை அலுவலர்கள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. கொரோனா நோய் தொற்று மூன்றாவது அலை பரவல் தடுக்கும் பொருட்டு மக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.