ஜனாதிபதி பிபின் ராவத் உடலுக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன்? கொடுக்கப்பட்ட விளக்கம்
இந்திய இராணுவ தலைமை முப்படை தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில், அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின், நீலகிரி மாவட்டம், குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதால், இதில் இருந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர்.
பயணித்த 14 பேரில் 13 பேர் இறந்துவிட்ட நிலையில், ஒருவர் மட்டும் பெங்களூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடல் டெல்லிக்கு கொண்டு வரப்பட்ட போது, விமான நிலையத்தில் மலர் வளையம் வைத்து பிரதமர் மோடி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
ஆனால், முப்படைகளின் தலைமை கமாண்டரான ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தளபதி பிபின் ராவத் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து ஜனாதிபதியின் ஊடக செயலர் அஜய் சிங் கூறுகையில், முப்படைகளின் சுப்ரீம் கமாண்டராக ஜனாதிபதி உள்ளார். அவருக்கு தலைமை தளபதி, வீரர் என எந்த பாகுபாடும் கிடையாது.
அனைவரும் ஒன்று தான். இறந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதில் ஒரு நடைமுறை உள்ளது. இறந்த இராணுவ வீரர்கள் உடல் மீது மலர் வளையம் வைத்து ஜனாதிபதி அஞ்சலி செலுத்த மாட்டார்.
ஜனாதிபதிக்கு பதில் பிரதமரோ அல்லது இராணுவ அமைச்சரோ மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவது தான் நடைமுறை.
அது தான் இப்போது பின்பற்றப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விபத்து பற்றி அறிந்ததும் தன் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஜனாதிபதி ரத்து செய்துவிட்டதாகவும், விபத்து பற்றிய விபரங்களை அதிகாரிகளிடம் தொடர்ந்து கேட்டறிந்ததாகவும் கூறியுள்ளார்.