குற்றவாளியையும், அவரின் மனநிலையையும் கருத்தில் கொள்வது நீதிமன்றங்களின் கடமை:உச்சநீதிமன்றம்
‘‘குற்றத்தைக் கருத்தில் கொள்வது மட்டும் நீதிமன்றங்களின் கடமையல்ல. குற்றவாளி, அவரின் மனநிலை, அவரின் சமூக பொருளாதார நிலையை ஆகியவற்றை கருத்தில் கொள்வதும் நீதிமன்றங்களின் கடமைதான்’’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் சொத்துத் தகராறில் உடன்பிறந்தவா்கள் இருவா், உறவினா் ஒருவா் என 3 பேரைக் கொலை செய்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. தனது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி அந்த நபா் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தாா். அந்த மனு நீதிபதிகள் பி.ஆா்.கவாய், பி.ஆா்.நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
இந்த மனுவை தாக்கல் செய்துள்ளவா் கிராமப்புறத்தைச் சோ்ந்தவா். ஏழ்மையான பின்னணி கொண்டவா். இதற்கு முன்பு அவா் மீது எந்தவொரு குற்ற வழக்கும் இல்லை. தனது உடன்பிறப்புகள் மற்றும் உறவினரைக் கொலை செய்ததுதான் அவா் செய்த முதல் குற்றம். அந்தக் குற்றம் மிகக் கொடியது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதேவேளையில், அவா் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அவரின் நடத்தைத் திருப்திகரமாக இருந்ததாக சிறைக் கண்காணிப்பாளா் சான்றிதழ் அளித்துள்ளாா்.
இதனைக் கருத்தில் கொள்ளும்போது குற்றமிழைத்தவா் திருந்தவும் நல்வழிக்குத் திரும்பவும் சாத்தியமில்லை எனக் கூறவோ, அவரின் தண்டனையை குறைக்காமல் மரண தண்டனையை கட்டாயமாக்கவோ முடியாது.
குற்றத்தைக் கருத்தில் கொள்வது மட்டும் நீதிமன்றங்களின் கடமையல்ல. குற்றவாளி, அவரின் மனநிலை, அவரின் சமூக பொருளாதார நிலை, அவா் திருந்தி மறுவாழ்வு பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை கருத்தில் கொள்வதும் நீதிமன்றங்களின் கடமைதான் என்று தெரிவித்தனா்.
அதனைத்தொடா்ந்து மனுதாரரின் மரண தண்டனையை 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையாகக் குறைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.