இந்தியாவில் பெண் தொழிலாளர் வருமானம் 18% ஆக குறைவு.. அதிர்ச்சி ரிப்போர்ட்…
கடந்த 1991ம் ஆண்டில் இருந்து 2019ம் ஆண்டு வரை கணக்கிடப்பட்ட இந்த அறிக்கை 180 நாடுகளை உள்ளடக்கி உள்ளது.
இதுதொடர்பாக உலக சமத்துவமின்மை அறிக்கை 2022ல், கூறப்பட்டுள்ளதாவது, பெண்களின் வருவாய் பங்கு 10% முதல் 45% வரையில் நாடுகளுக்கு ஏற்ப வேறுபடுகிறது. உலகம் முழுவதும் 50%க்கும் குறைவாகவே இந்த விகிதம் உள்ளது. இந்தியாவில் தொழிலாளர் வருவாயில் ஆண்களுக்கு 82% கிடைக்கும்போது பெண்களுக்கு அது 18% என்ற அளவில் உள்ளது என அதிர்ச்சி தெரிவிக்கிறது.
இது, கடந்த 2019ம் ஆண்டில் ஆசியாவின் சராசரியான 27% என்ற அளவை விடவும் குறைவு ஆகும். இந்தியாவில் இது 18.3% ஆகவும், அண்டை நாடுகளான பூடான் (17.5%), வங்காளதேசம் (16.9%), பாகிஸ்தான் (7.4%) மற்றும் ஆப்கானிஸ்தான் (4.2%) ஆகிய நாடுகளில் இதனை விடவும் குறைவாகவும் உள்ளது.
எனினும் நேபாளம் (23.2%), இலங்கை (23.3%) மற்றும் சீனா (33.4%) ஆகிய நாடுகளில் சற்று அதிக அளவிலான விகிதம் காணப்படுகிறது.
உலக வங்கி மதிப்பீட்டின்படி, 2005ம் ஆண்டில் 26% ஆக இருந்த இந்த விகிதம், 2019ம் ஆண்டில் 20.3% ஆக வீழ்ச்சி கண்டது. கடந்த 2020ம் ஆண்டு ஜூலை-செப்டம்பர் வரையிலான பெருந்தொற்று காலகட்டத்தில் இந்த விகிதம் 16.1% என பெருமளவில் குறைந்தது.
உலக அளவில் பெண்களுக்கான வருவாய் விகிதம் (45%) அதிகம் கொண்ட நாடாக மோல்டாவா உள்ளது. மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் சராசரியாக 15% என்ற அளவில் உள்ளது. ஏமன் நாடு மிக குறைந்த பெண்களுக்கான வருவாய் விகிதம் (1%) கொண்ட நாடாக உள்ளது.
வேலையின் வழியே பெண்களுக்கு கிடைத்த ஒட்டு மொத்த வருவாய், கடந்த 1990ம் ஆண்டில் 30% என்ற அளவிலும், இன்றைய தினம் 34% என்ற அளவிலும் உள்ளது. வேலை செய்வதில் பெண்களின் பங்கு பெரிய அளவில் அதிகரித்து உள்ளது. எனினும், பெண்களின் பணிக்கான வருவாய் பங்கு என்பது இன்னும் மிக குறைந்த அளவிலேயே காணப்படுகிறது என்று அறிக்கை தெரிவித்து உள்ளது.