பேரினவாத சக்திகளை முறியடிக்க தமிழ், முஸ்லிம் சமூகம் ஒன்றுபட வேண்டும்- சுமந்திரன்

பேரினவாதிகள் ஒரே சமயத்தில் தமிழ் முஸ்லிம் இரு சிறுபான்மையினரையும் தாக்குவதில்லை. எங்களுக்குள்ளே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் ஒரு வேளையில் ஒரு சமூகத்திற்கு எதிராக மட்டுமே பேரினவாதம் செயற்படுகின்றது. இது யுத்த காலத்தில் உச்சம்பெற்றதனை அவதானிக்கலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லீம் ஆதரவாளர் வட்டத்தின் ஏற்பாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை ஆதரித்து வடக்கு முஸ்லீம் சமூகத்தின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று பிள்ளையார் இன் தனியார் விடுதியில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு வாழ் முஸ்லீம்கள் சரியான ஒரு நிலைப்பாட்டினை எடுத்துள்ளனர். இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். தமிழ் முஸ்லீம் மக்களுக்கிடையிலான உறவு மொழியினால் பலமடைந்த ஒன்றாகும்.
இந்த நாட்டில் உள்ள பாரிய பிரச்சினை பேரினவாதமாகும். பேரினவாதம் இந்த நாட்டினை சின்னாபின்னப்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்சினை எண்ணிக்கையில் சிறுபான்மையாக உள்ள தமிழ், முஸ்லீம் மக்களையே பாதிக்கின்றது. எண்ணிக்கையில் சிறுபான்மையாக உள்ள எங்களுக்கு எதிராக பல தடவைகள் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.
கடந்த காலங்களில் முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்தோடு ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அந்த வெறுப்புணர்ச்சி இப்போதும் அப்படியே உள்ளது.
இந்தத் தருணத்தில் நாங்கள் ஒன்றாக இருக்க வேண்டும். ஒரு சமூகத்தினை வைத்து இன்னொரு சமூகத்தினை கையாள்கின்ற சூழ்ச்சியை நாம் முறியடிக்க வேண்டும். மொழியால் ஒன்றுபட்ட நாம் ஒன்றுபட்டு வாழ எந்தத் தடையும் இல்லை. இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கூட வடக்கும் கிழக்கும் தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்ட போது கிழக்கில் உள்ள இந்துக்களின் தொல்லியல் இடங்களை பௌத்தர்களுக்கு உரியதாக மாற்றப் போகின்றார்கள் என நான் நினைத்தேன். ஆனால் மசூதி ஒன்றின் நிலத்தினையே தொல்லியல் திணைக்களம் முதலில் அளவிட்டது. எனவே நாம் ஒன்றாக செயற்பட்டால் தான் பேரினவாத செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடமுடியும். இரு இனங்களும் ஒருவருக்கொருவர் சரியாக புரிந்து கொண்டு முன்னேற வேண்டும், என்றார்.

Comments are closed.