டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஜடேஜா ஓய்வு?
இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. 2009ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான ஜடேஜா, 2012ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
ஸ்பின் ஆல்ரவுண்டராக அறிமுகமாகி கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்காக பெரும் பங்காற்றிய ஜடேஜா, அண்மைக்காலமாக அபாரமாக பேட்டிங்கால், பேட்டிங் ஆல்ரவுண்டராக மாறிவிட்டார். 2019 ஒருநாள் உலக கோப்பை அரையிறுதியில் ரோஹித், விராட் கோலி, ராகுல் என அனைத்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும், மிடில் ஆர்டரில் ஆடிய பேட்ஸ்மேன்களும் என அனைவருமே ஏமாற்றமளிக்க, ஜடேஜா அதிரடியாக ஆடி கடைசி வரை போட்டியை எடுத்துச்சென்றார். அதுமுதல் அவரது பேட்டிங் வேற லெவலில் உள்ளது.
பின்வரிசையில் அதிரடியான பேட்டிங், அணிக்கு தேவைப்படும் போதெல்லாம் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்துதல், அசாத்திய ரன் அவுட்டுகள் மற்றும் கேட்ச்சுகள் என பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய 3 விதத்திலும் அணிக்கு சிறந்த பங்காற்றக்கூடியவர் ஜடேஜா.
இந்திய அணியின் மிகச்சிறந்த ஃபிட்டான வீரர்களில் ஒருவர் ஜடேஜா. அவரது ஃபிட்னெஸ் தான், அவரது சிறப்பான ஆட்டத்திற்கு காரணம். இந்நிலையில், அண்மைக்காலமாக அவர் அடிக்கடி காயமடைகிறார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆடிய ஜடேஜா, கையில் காயம் காரணமாக 2ஆவது டெஸ்ட்டில் ஆடவில்லை. அதனால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் கூட ஜடேஜா இடம்பெறவில்லை.
ஜடேஜா விரைவில் குணமடைந்து முழு ஃபிட்னெஸுடன் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பிக்கொண்டிருக்கும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து ஜடேஜா சிந்தித்துவருவதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மட்டும் முழு கவனம் செலுத்தும் விதமாக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற ஜடேஜா தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியான தகவலாக அமைந்துள்ளது.
இதுவரை 56 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா, 2145 ரன்கள் அடித்துள்ளார். 223 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இடது கை ஸ்பின்னர் என்ற சாதனையும் அவரிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.