பள்ளி மாணவர்களுக்கு சம-பாலின உடை: அசத்தும் அரசுப் பள்ளி
கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்கள், மாணவிகள் ஆகியோருக்கு ஒரே மாதிரியான உடை சீருடையாக வழங்கப்பட்டுள்ளது. பாலின பேதங்களை போக்கும் வகையில் இம்முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பாலின சமத்துவத்திற்கான தேடல் பல்வேறு பரிமாணங்களில் பயணிக்க தொடங்கியதுள்ளது. அதில், ஒன்று உடையில் இருந்து சமத்துவத்துவத்தை ஏற்படுத்துவது என்பது. ஒருபாலினத்தவருக்கான உடைகள் சந்தைகளில் புழக்கத்தில் உள்ள போதிலும், பள்ளியில் இருந்தே பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்கள்,மாணவிகள் ஆகிய இரு பாலினத்தவரும் அணியும் வகையிலான உடையை கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள அரசு பள்ளி கொண்டுவந்துள்ளது.
கோழிக்கோடு மாவட்டத்தின், பாலுச்சேரியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி ஒன்று பிளஸ் ஒன் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு இந்த சம பாலின உடையை சீருடையாக கொண்டுவந்துள்ளது. அதன்படி, இன்று 200க்கும் மேற்பட்ட மாணவிகள் மாணவர்களை போன்று சட்டையும் பேண்டும் அணிந்துகொண்டு பள்ளிக்கு வந்தனர்.
சுதந்திரத்தில் சமத்துவம், அணுகுமுறை’ எனப்படும் பாலின சமத்துவ சீருடைகளை மாநிலம் தழுவிய அளவில் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து ஆன்லைனில் தொடங்கி வைத்தார்.
இதை தொடங்கிவைத்து பேசிய அவர், “புதிய கேரளாவுக்காக நாங்கள் தயாராகி வருகிறோம். சுதந்திரமான மற்றும் சமத்துவமான சூழலை நோக்கிய கல்வியை குழந்தைகள் பயில வேண்டும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர்கள் படிக்க வேண்டும். பாலின சமத்துவ சீருடைகள் பெண்களிடம் நம்பிக்கையை வளர்க்கும். சவுகரியம் மிக முக்கியமானது. இத்தகைய மாற்றங்களை பழமைவாதம் எப்போதும் எதிர்க்கும். அதற்கு பயப்பட வேண்டாம். தற்போதைய உடைகள் இயல்பாக நாம் ஏற்றுக்கொள்ளவில்லை நம் மீது திணிக்கப்பட்டது, என்று அவர் பேசினார்.
எனினும் இதற்கு முஸ்லீம் மாணவர் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டது. மாணவர்கள் மீது இம்முயற்சி திணிக்கப்படுவதாக அந்த கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. மேலும், பெண்கள் பள்ளியில் ஆண்களையும் அனுமதிப்பதற்கு அந்த அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. தற்போது, இந்த அரசு பள்ளியில் பிளஸ் ஒன் வகுப்பு பயிலும் 260 மாணாக்கர்களில் 60 பேர் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: பெட்ரோல், டீசல் மூலம் 8 லட்சம் கோடி ரூபாய் வருமானம் – நிர்மலா சீதாராமன் தகவல்
இது தொடர்பாக பள்ளி முதல்வர் இந்து கூறுகையில், இந்த சீருடை மாற்றம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதை அடுத்து பல தரப்பினரும் ஒப்புதல் தெரிவித்தனர். எந்த உடையும் யார் மீதும் திணிக்கப்படவில்லை. இந்த பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவிகள் குர்தா சுடிதார் அணிந்துதான் பள்ளிக்கு வருகின்றனர். விளையாட்டுகள் மற்றும் இதர போட்டிகளில் கலந்து கொள்ளபுதிய உடை மாணவிகளுக்கு ஏதுவாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.