கொல்கத்தா துர்கா பூஜைக்கு யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து
புகழ்பெற்ற கொல்கத்தா துர்கா பூஜை நிகழ்வுக்கு யுனெஸ்கோவின் பாரம்பரிய அந்தஸ்து (UNESCO Heritage Tag) வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலரும் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் துர்கா பூஜையும் ஒன்று. அன்னை துர்காவை பூஜிக்கும் இந்த துர்கா பூஜை நிகழ்வு இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டாலும், கொல்கத்தாவில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அகால போதான் , துர்கோட்சப், பூஜோ என பல்வேறு பெயரில் இத்திருவிழா அழைக்கப்படுகிறது.
இத்தகைய பெருமைமிக துர்கா பூஜையை மேலும் கௌரவப்படுத்தும் விதமாக யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொல்கத்தாவில் நடைபெறும் துர்கா பூஜை பாரம்பரிய பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்தியாவுக்கு வாழ்த்துக்கள்” என ஐக்கிய நாடுகள் சபையில் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ரி ட்விட் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமையும் மகிழ்ச்சியும் தரக்கூடிய விஷயம்! துர்கா பூஜை நமது பாரம்பரியங்கள் மற்றும் நெறிமுறைகளில் சிறந்ததை எடுத்துக்காட்டுகிறது. மேலும், கொல்கத்தாவின் துர்கா பூஜை ஒவ்வொருவரும் கட்டாயமாக பெற வேண்டிய அனுபவம் என்று பதிவிட்டுள்ளார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், வங்காளத்திற்கு பெருமையான தருணம்! உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு வங்காளருக்கும் துர்கா பூஜை என்பது பண்டிகையை விட மிக பெரியது. துர்கா பூஜை என்பது அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு உணர்வு. இப்போது, துர்கா பூஜை மனிதகுலத்தின் அருவமான கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிநிதி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. நாங்கள் மகிழ்ச்சியில் திளைக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.