புகைப் பிடித்ததற்கு அபராதம்: பழிவாங்க ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்
ரயிலில் புகை பிடித்தற்காக அபராதம் விதிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த நபர், பழிவாங்குவதற்காக ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ராவில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படைக்கு (RPF) கடந்த செவ்வாய் கிழமையன்று மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் பேசியுள்ளார். அப்போது, கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் உடனடியாக கர்நாடக ரயில்வே போலீசாருக்கு (GRP) தெரிவிக்கப்பட்டது.
செவ்வாய்கிழமை இரவு 11 மணியளவில் கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திராவின் தர்மாவரம் வந்தடைந்தவுடன் ஆர்பிஎஃப் மற்றும் ஜிஆர்பி அதிகாரிகள் மெட்டல் டிடெக்டர்கள் மற்றும் மோப்ப நாயுடன் அனைத்து பெட்டிகளிலும் சோதனை நடத்தினர். புதன்கிழமை அதிகாலை வரை இந்த தேடுதல் வேட்டை நடந்தாலும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
பின்னர், அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ரயிலில் புகை பிடித்ததற்காக பயணி ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அவர் பழி வாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதரரை தொடர்புகொண்டுள்ளார். இருவரும் திட்டமிட்டு கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து, ரயிலில் பயணித்தவரின் சகோதரரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரயில் பெங்களூருவை சென்றடையும் வரை தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.