சஜித்தால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது! – ‘மொட்டு’ எம்.பி. கூறுகின்றார்.
“சஜித் பிரேமதாஸவால் தற்காலிகமாக அரச எதிர்ப்பு அலையை உருவாக்க முடியும். ஆனால், அவரால் ஆட்சிக்கு வரமுடியாது. அதற்கான வாய்ப்பையும் நாம் வழங்கமாட்டோம்.”
இவ்வாறு ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நல்லாட்சியின்போது சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக இருந்தார். ஆனால், அவர்களால் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாமல் போனது. அனைத்து வழிகளிலும் நாட்டைக் குழப்பினர். இவ்வாறு செய்தவர்கள் இன்று இந்த அரசை விமர்சித்து, ஆட்சியைக் கோருவது வேடிக்கையானது.
கொரோனாப் பெருந்தொற்றால் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது. இதனைப் பயன்படுத்தி அரச எதிர்ப்பு அலையை உருவாக்கலாம். இது நிரந்தரமல்ல. நாம் மக்களுக்கு உரிய சேவைகளை வழங்கி முன்னேறுவோம்” – என்றார்.