போராளிகளைப் பற்றி கதைப்பதற்கு தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு- விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை
போராளிகளையும் போராளிக் கட்டமைப்பினையும் வஞ்சகம் செய்பவர்கள் நிறுத்த வேண்டும். போராளிகள் பெரும் தியாகங்களைப் புரிந்தவர்கள். போராளிகளைப் பற்றி கதைப்பதற்கு தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் கண்ணன் தெரிவித்தார்.
யாழ் ஊடக மன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்கான அதிகாரங்களை கேட்டுநிற்கின்றோம். கடந்த காலங்களில் தமிழ் தலைமைகளின் பிழையான செயற்பாடுகளால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நாங்கள் மக்களுடன் கலந்துரையாடிய போது மக்களின் விரக்தி மனநிலை தெளிவாக புரிகின்றது.
அனைத்து தரப்பினரையும் ஒன்றாக செயற்படுமாறு அரசியல் தலைமைகள் கூறுகின்றனர். நாமும் அதை வரவேற்கின்றோம். ஆனால் அரசியல் தலைகள் பிரிவினைகளை பேசி பிரிந்து நிற்கவே விரும்புகின்றனர். எனினும் நாம் அனைத்து முன்னாள் போராளிகளையும், அனைத்துக் கட்சிகளையும் ஒருமித்து ஒன்றாக முன்னோக்கி செல்ல தயாராக உள்ளோம்.
புலம்பெயர் தமிழர்கள் பயமின்றி இங்கே முதலீடுகளை செய்ய வேண்டும். பாரிய முதலீடுகளை மேற்கொள்ளாது விட்டாலும் சிறு சிறு முதலீடுகளை மேற்கொண்டு வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தினை வழங்கி உதவ முன்வர வேண்டும்.
தலைவரின் வழிகாட்டலில் நேரான வழியில் சென்ற எம் இனம் தற்போது வஞ்சகம் நிறைந்த அரசியலில் மூழ்கியுள்ளது. கடந்த காலங்களில் ஆயுத தாரிகளாக செயற்பட்ட நாங்கள் தற்போது அரசியல் ரீதியாக செயற்பட ஆணைகோருகின்றோம்.
எங்களுடைய விடுதலைப் போராட்டத்தில் ஒரு வியர்வையைக்கூட சிந்தாதவர்களே எமது அரசியல் தலைமைகளாக உள்ளனர். போராளிகளையும் போராளிக் கட்டமைப்பினையும் வஞ்சகம் செய்பவர்கள் நிறுத்த வேண்டும். போராளிகள் பெரும் தியாகங்களைப் புரிந்தவர்கள். போராளிகளைப் பற்றி கதைப்பதற்கு தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. தாங்கள் தளபதிகள் என கூறிக்கொண்டு போராளிகளைப் பற்றிக் கதைப்பவர்கள் தமிழினத்தின் துரோகிகளாகக் கருதப்பட்டு நிராகரிக்கப் படுவார்கள்.
விடுதலைப் புலிகளின் முகவரியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் இப்போது தமிழ் மக்களின் முகவரியுடன் தேர்தலில் களமிறங்கியுள்ளோம்.தமிழர்கள் உரிமையையும் பொருளாதாரத்தையும் ஒரு சேர மீட்க வேண்டும். தமிழர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும், என்றார்.
Comments are closed.