திமுக அரசை கண்டித்து அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்
திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தேனியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், சேலத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தலைமை தாங்கி இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றனர்.
பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைப்பது, அனைவருக்கும் பொங்கல் பரிசுத்தொகை அளிப்பது, வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். இதேபோல் தேனியில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தமிழக மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து, மாவட்டத் தலைநகரங்களில் இம்மாதம் 9ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக முதலில் அறிவித்தது. பின்னர், 11ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் என அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, அதிமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் மீண்டும் தேதி மாற்றப்பட்டு, அதிமுக சார்பில், மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து, மாவட்டத் தலைநகரங்களில் 11.12.2021 அன்று நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் 17ஆம் வெள்ளிக்கிழமை (இன்று) காலை 10 மணியளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.