இளம் பெண் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவத்தின் சந்தேகநபர் கைது.
வவுனியா, நெடுங்கேணி, சேனைப்பிலவு பகுதியில் இளம் பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் பெண் வழிமறிக்கப்பட்டு துப்பாக்கியால் சுடப்பட்டார்.
31 வயதான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்தார்.
பிரதான சந்தேகநபர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில், தோட்டக்காணி ஒன்றில் மறைந்திருந்த நிலையில் சந்தேகநபர் இன்று பொலிஸால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் உயிரிழந்த பெண்ணின் மைத்துனர் முறையானவர் என்று கூறப்படுகின்றது. அவர் தன்னை திருமணம் செய்யுமாறு பெண்ணை வற்புறுத்தி வந்த நிலையில், அதனால் ஏற்பட்ட முரண்பாடே கொலைக்குக்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
தோட்டக் காணியில் மறைந்திருந்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்ய முயன்றபோது, அவர் நஞ்சருந்த முயற்சித்துள்ளார்.
எனினும் அவரைக் கைது செய்த பொலிஸார் மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர் என்று தெரியவருகின்றது.