போதை பொருள் கடத்திய பூனையார் கைது!

1.7 கிராம் போதைப்பொருள், இரண்டு சிம் கார்டுகள் மற்றும் கழுத்தில் கட்டப்பட்ட ஒரு சிறிய அட்டை ஆகியவற்றுடன் கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்குள் நுழைந்த பூனை ஒன்றை ஆகஸ்ட் 01ம் திகதி அன்று சிறை புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர்.

தற்போது ரிமாண்ட் காவலில் உள்ள போதைக்கு அடிமையானவரின் தேவையை கருத்தில் கொண்டு சிறை வளாகத்தில் அருகாமையில் வசிக்கும் சிறைச்சாலைக்குள் வந்து செல்லும் பூனை சட்டவிரோத செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சிறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

கைதிகளுக்கு சிறை சுவர்கள் மீது சில சட்டவிரோத பொருட்கள் வீசப்பட்டதாக செய்திகள் வந்துள்ள போதிலும், ஒரு பூனைக்கு எதிராக இதுபோன்ற வழக்கு பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறை என்று சிறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலதிக விசாரணைகளுக்காக பார்சல் மற்றும் பூனையை போலீசாரிடம் ஒப்படைத்ததாக சிறை ஆணையர் சந்தன ஏகநாயக்க தெரிவித்தார்.

அண்மையில், மீகொட பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கடல் கழுகு ஒன்று நீதிமன்ற உத்தரவின் பேரில் தெகிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த கழுகு மூலம் போதை பொருட்கள் கடத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் போலீசாருக்கு கிடைத்திருந்தன.

பிந்திய இணைப்பு

பூனையின் கழுத்தில் ஹெரோயின்
சிம் அட்டை, மெமரி கார்ட்டும் மீட்பு

வெலிக்கடை மெகசின் சிறைச்சாலைக்குக் ஹெரோயின் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டது எனச் சந்தேகிக்கப்படும் பூனையொன்று மீட்டுள்ளது எனச் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலைக்கு முன்னால் கழுத்தில் ஏதோ சிறு பொதியொன்று கட்டப்பட்டிருந்த பூனையொன்றை அவதானித்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர், அதனைப் பரிசோதித்தபோது, அதில் 1.7 கிராம் ஹெரோயின் இருப்பது தெரியவந்துள்ளது.

மிக சூட்சுமமாக பொதி செய்யப்பட்ட குறித்த சிறிய பொதியில் 2 சிம் அட்டைகள் மற்றும் மெமரி அட்டை ஆகியன காணப்பட்டன என்று சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பூனை, பொரளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனச் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

பூனை ஒன்றைப் பயன்படுத்தி இதுபோன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

சம்பவம் குறித்து சிறைச்சாலைகள் திணைக்களம், பொரளைப் பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதேவேளை, போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது எனச் சந்தேகிக்கப்படும் கழுகொன்றைப் பொலிஸார் அண்மையில் மீட்டிருந்தனர்.

குறித்த கழுகு, பாதாளக் குழுவொன்றின் தலைவராகக் கருதப்படும் அங்கொட லொக்கா என்பவருக்குச் சொந்தமானது எனப் பொலிஸார் தெரிவித்திருந்த நிலையில், அதனை மிருகக்காட்சிச் சாலையில் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் மற்றும் நூற்றுக்கணக்கான கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதில், சிறைச்சாலைக்கு வெளியிலிருந்து இவ்வாறான பொருட்கள் வீசப்படுவது கண்டறியப்பட்டதோடு, அது தொடர்பில் பல சந்தேகநபர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டு, கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை, கைதிகளுக்கு வசதிகள் மற்றும் உதவிகள் புரிந்தமை தொடர்பில் நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகள் நால்வருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன் அதில் மூவர் கைதுசெய்யப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Comments are closed.