இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம்.
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 26-ந்தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டிருந்தார். அஜிங்யா ரஹானேவிடம் இருந்து துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. ஆனால் வலை பயிற்சியின் போது இடது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் ரோகித் சர்மா விலக நேரிட்டது.
இதனால் தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் துணை கேப்டனாக கே.எல்.ராகுலை தேர்வு கமிட்டி நியமித்து இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 29 வயதான கே.எல்.ராகுல் 40 டெஸ்டுகளில் விளையாடி 6 சதம் உள்பட 2,321 ரன்கள் சேர்த்துள்ளார்.
இதற்கிடையே மும்பையில் 3 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருந்த இந்திய வீரர்கள் தென்ஆப்பிரிக்கா சென்றதும் அங்கு ஒரு நாள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். இந்திய வீரர்கள் தங்கியுள்ள சொகுசு விடுதியின் மொத்த அறைகளையும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமே முன்பதிவு செய்துள்ளது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் வீரர்களுக்கு வெளிநபர் மூலம் கொரோனா பரவிடக்கூடாது என்பதற்காக தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் விடுதியை முழுமையாக வாடகைக்கு எடுத்து விட்டது.
நேற்று முன்தினம் வீரர்கள் ஜாலியாக கைப்பந்தை காலால் உதைத்து விளையாடி மகிழ்ந்தனர். ஓட்டப்பயிற்சியிலும் ஈடுபட்டனர். ‘நாம் கடலின் சம மட்டத்தில் உள்ள இடத்தில் இருந்து இங்கு வந்திருக்கிறோம். ஆனால் செஞ்சூரியன் கடல் மட்டத்தில் இருந்து 1,400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பகுதியாகும். அதற்கு ஏற்ப வீரர்கள் தங்களை மாற்றிக் கொள்ள 2-3 நாட்கள் ஆகும்’ என்று இந்திய அணிக்கான உடல்தகுதியை வலுப்படுத்தும் பயிற்சியாளர் சோஹம் தேசாய் தெரிவித்தார்.