ஒரே ஆண்டில் 4 மாணவர்கள் தற்கொலை… விடுதியில் சீலிங் ஃபேன்களை தூக்கும் பிரபல கல்வி நிறுவனம்
பிரபல கல்வி நிறுவனம் ஒன்றின் விடுதியில் ஒரே ஆண்டில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களில் 3 பேர் சீலிங் ஃபேனில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்கள். இதையடுத்து அங்கு சீலிங் ஃபேன்களை அகற்ற நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், பெங்களூருவில் செயல்பட்டு வருகிறது. இதற்கு சொந்தமான விடுதியில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரையில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த தற்கொலைகளில் சீலிங் ஃபேன் முக்கிய பங்கை வகித்துள்ளது. அதாவது தற்கொலை செய்து கொண்டவர்களில் 3 பேர் சீலிங் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தற்கொலைக்கு ஏற்ற சூழல் இருந்ததும், உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதையடுத்து, தற்கொலைக்கு உதவியாக இருக்கும் பொருட்களை விடுதி நிர்வாகம் அகற்றி வருகிறது. அதன் அடிப்படையில் அங்குள்ள சீலிங் ஃபேன்கள் அகற்றப்பட்டு சுவற்றில் மாற்றப்படும் ஃபேன் மற்றும் டேபிள் ஃபேன்கள் இடம் பெற வைக்கப்பட்டுள்ளன. உளவியல் நிபுணர்கள் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விடுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று தீவிரம் அடைந்த சூழலில், இந்திய அறிவியல் நிறுவனத்தில் பயின்ற மாணவர்கள் விடுதியில் தங்க வைக்கப்படும் கட்டாயத்திற்கு ஆளானார்கள். அப்போது மாணவர்களின் மன ஆரோக்கியத்திற்கு போதிய அக்கறை செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.