தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழக மீனவர்கள் 68 பேரை விடுதலை செய்யக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 55 பேரை, கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை கடற்படை நடுக்கடலில் கைது செய்தது. அவர்களை விடுதலை செய்யக் கோரி மீனவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 13 மீனவர்களையும் இலங்கை கடற்படை திங்கட்கிழமை கைது செய்தது. இதையடுத்து, ஏற்கெனவே வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ராமேஸ்வரம் மீனவர்களோடு, ஜெகதாப்பட்டினம் மீனவர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, 2வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மீனவர்கள், புதன்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். இந்நிலையில், இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், இலங்கை கடற்படை அத்துமீறி தமிழக மீனவர்கள் 68 பேரை கைது செய்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், இந்த அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க தூதரக ரீதியிலான நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய கடிதத்தை, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் திமுக எம்.பிக்கள் நேரில் வழங்கினர்.
இதையடுத்து, இரு நாட்டு மீனவர்கள் இடையே மீண்டும் தொடங்கவுள்ள பேச்சுவார்த்தையில் கலந்து கொள்பவர்களின் பட்டியலையும், விருப்பமுள்ள தேதியும் தெரிவிக்குமாறு, தமிழக அரசை வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இரு நாட்டு மீனவர்களும் கடைசியாக கடந்த 2016ம் ஆண்டு டெல்லியில் சந்தித்துப் பேசினர். கடந்த ஆண்டு செப்டம்பரில் காணொலி மூலமாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் கலந்துரையாடிய போது பிரதமர் மோடி, மீனவர்கள் விவகாரத்தில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை இந்திய தூதரக அதிகாரிகள் சந்தித்ததாக மத்திய அரசு கூறியுள்ளது. இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதன்படி, அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசுவதற்கும், அவர்களுக்குத் தேவையான உணவளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் 68 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.