தடுப்பூசி செலுத்தாவிட்டால் ஊதியம் இல்லை: பஞ்சாப் அரசு
அரசு ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தாவிட்டால், ஊதியம் வழங்கப்படாது என பஞ்சாப் அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிப்பதையொட்டி, மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் கடுமையான நடைமுறைகளை பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. இதன் பகுதியாக, இரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டாலே அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊதியத்தைப் பெறுவதற்கு இரு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழைப் பஞ்சாப் அரசு தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜனவரி 1 முதல் இரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே பொது இடங்களில் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற உத்தரவை ஹரியாணா சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் இன்று (புதன்கிழமை) அறிவித்தார்.
இந்தியாவில் இதுவரை 213 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தில்லியில் 57 பேரும், மகாராஷ்டிரத்தில் 54 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.