மதம் மாறுவதை கடுமையாக்கிய கர்நாடக அரசு… விதி மீறினால் 10 ஆண்டுகள் வரை சிறை
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், கட்டாய மதமாற்ற தடை மசோதா கர்நாடக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளுநரின் ஒப்புதலுக்கு பின்னர் இந்த மசோதா சட்டமாக நடைமுறைக்கு வரவுள்ளது.
முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு கர்நாடகாவில் ஆட்சியில் உள்ளது. இங்கு, கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாகவும், அதை தடுப்பதற்கு மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் முதல்வர் சமீபகாலமாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.
இந்த நிலை கட்டாய மதமாற்றத் தடை தொடர்பான மசோதா சட்டமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அதாவது, இந்த சட்டத்தின்படி ஒருவர் மதம் மாற விரும்பினால் அவர் 2 மாதங்களுக்கு முன்பே சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும். இதை செய்ய தவறினால் கடுமையான குற்றமாக இந்த செயல் கருதப்படும்.
சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை சிலர் அனுபவித்து வருகின்றனர். இனி மதம் மாறினால் இந்த சலுகைகள் ரத்து செய்யப்படும். அவர்கள் சேரும் மதத்தில் ஏதேனும் சலுகைகள் இருந்தால் அதனை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.
இந்த சட்டத்தை மீறினால் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். அதிலும் குறிப்பாக சிறுவர்கள், பெண்கள், பழங்குடியின மக்களை வேறு மதத்திற்கு மாற்ற முயற்சித்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
முன்னதாக மதமாற்ற தடை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள், மதமாற்ற தடை சட்டம் என்பது சிறுபான்மையினரை மட்டுமல்லாமல் பெரும்பான்மையினரையும் பாதிக்கும் என்று கூறியிருந்தனர்.
கட்டாய மதமாற்ற மசோதாவில் குறிப்பிட்டுள்ள அம்சங்களின்படி, கர்நாடகாவில் இனி மதம் மாறுவது முன்பைப் போல் அவ்வளவு எளிதாக இருக்காது. அதேநேரம் கட்டாய மதமாற்றம் செய்ய முயல்வோருக்கு இந்த மசோதா கடிவாளம் போட்டுள்ளது.