ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை வரலாறு: 150 பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும்; பிரதமா் யோசனை
ஆன்மிகத் தலைவா் ஸ்ரீ அரவிந்தரின் 150-ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக அவருடைய வாழ்க்கை, தத்துவங்கள் குறித்து நாடு முழுவதிலுமிருந்து 150 பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை யோசனை தெரிவித்தாா்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 1872-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி பிறந்தவா் அரவிந்த கோஷ். தீவிரவாத வழியில் விடுதலைப் போராட்ட வீரரான அவா், பின்னா் ஆன்மிகத்தில் ஈடுபட்டு, பிரான்ஸ் காலனியான புதுச்சேரிக்கு வந்து ஆசிரமம் அமைத்து தியானத்திலும் யோகத்திலும் ஈடுபட்டாா்.
இவருடைய 150-ஆவது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக 53 உறுப்பினா்களைக் கொண்ட உயா்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவின் முதல் கூட்டம் பிரதமா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமா் பேசியது குறித்து மத்திய கலாசார அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
உலக நாடுகளுக்கெல்லாம் ஆன்மிகத்தை போதித்த உலக ஆன்மிக தலைவரின் 150-ஆவது பிறந்த நாளை மிகப் பெரிய அளவில் கொண்டாடுவது இந்தியாவின் கடமை. அவருடைய 150-ஆவது பிறந்த நாளை குறிக்கும் வகையில் அவருடைய வாழ்க்கை, தத்துவங்கள் குறித்து நாடு முழுவதிலுமிருந்து 150 பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
மேலும், குஜராத் முதல்வராக இருந்தபோது ஸ்ரீ அரவிந்தரின் சீடா் கிரீட் ஜோஷியுடன் உரையாடியதை நினைவுகூா்ந்த பிரதமா், ‘அவருடன் நடத்திய உரையாடல் அரவிந்தா் குறித்த எனது சிந்தனைகளை மேலும் வளப்படுத்தியதோடு, தேசிய கல்விக் கொள்கை தயாரிப்பு பணியில் ஈடுபட்டபோது ஆழமாக பிரதிபலித்தது. ஸ்ரீ அரவிந்தா் குறித்த கிரீட் ஜோஷியின் இலக்கியங்கள் உலக அளவில் பரவலாக பரப்பப்பட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.
தேசிய இளைஞா் தின கொண்டாடத்துடன் இணைந்து, ஸ்ரீ அரவிந்தரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை புதுச்சேரியில் தொடங்கி வைக்க பிரதமா் திட்டமிட்டுள்ளாா். இது, இளைஞா்கள் புதுச்சேரிக்கு வந்து அரவிந்தரின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஆன்மிக போதனைகளை அறிந்துகொள்ள ஊக்குவிக்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநானக் தேவ் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிரதமா் உரை
குஜராத் மாநிலம் கட்ச் நகரில் உள்ள குருத்வாரா லாக்பட் சாஹிபில் சனிக்கிழமை (டிச.25) நடைபெற இருக்கும் சீக்கிய மத குரு குருநானக் தேவ் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி காணொலி வழியில் உரையாற்ற உள்ளாா்.
குருத்வாரா லாக்பட் சாஹிபில் குஜராத் சீக்கிய சங்கத்தினா் சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் 23 முதல் 25-ஆம் தேதி வரை குருநானக் தேவ் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. குருநானக் தேவ் தனது பயணத்தின் போது லாக்பட்டில் தங்கியிருந்தாா். மரத்தாலான காலணி, சாய்வு மேசை, குா்முகியின் கையெழுத்துப் பிரதிகள் உள்ளிட்ட அவரது நினைவுச் சின்னங்கள் குருத்வாரா லாக்பட் சாஹிபில் உள்ளன. பிறந்த நாள் கொண்டாடத்தின் நிறைவு நாளான சனிக்கிழமை பிரதமா் மோடி காணொலி வழியில் உரையாற்ற உள்ளாா்.