பல்வேறு நாடுகளில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் இரத்து.
ஒமிக்ரோன் கொவிட் திரிபு பரவல் நெருக்கடி காரணமாக உலகெங்கும் பல்வேறு நாடுகளில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன.
விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டதால் முன்கூட்டியே திட்டமிட்டிருந்த கிறிஸ்துமஸ் விடுமுறைக் கால பயணங்களை மேற்கொள்ள முடியாமல் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒமிக்ரோன் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் பல நாடுகள் மீண்டும் முடக்க நிலை உட்பட கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி வருகின்றன.
இத்தாலி, ஸ்பெயின் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள் மீண்டும் முககவசங்களை கட்டாயமாக்கியுள்ளன.
வடக்கு ஸ்பெயினில் உள்ள கேட்டலோனியா இரவு நேர ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது. மேலும் நெதர்லாந்து கடுமையான முடக்க நிலையில் உள்ளது.
ஏனைய கொவிட் திரிபுகளை விட ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டவர்கள் லேசான பாதிப்புகளையே எதிர்கொள்வதாக ஆரம்ப கால ஆய்வுகள் கூறுகின்றன. எனினும் இத்திரிபு வேகமாகப் பரவுவதால் மருத்துவமனை சேர்க்கைகள் அதிகரித்து வருவது கவலைகளை உருவாக்கியுள்ளது.
இங்கிலாந்தில் தினசரி தொற்று நோயாளர் தொகை ஒரு இலட்சத்தைக் கடந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிரான்ஸ் மற்றும் இத்தாலியிலும் தொற்று நோயாளர் தொகை கிடு-கிடுவென அதிகரித்து வருகிறது.
இதேவேளை, கிறிஸ்துமஸை ஒட்டி இவ்வாரம் முழுவதும் அதிகமாக பயணங்கள் மற்றும் அதிகளவு ஒன்றுகூடல்கள் அவதானிக்கப்பட்ட நிலையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிடையிலும் அதிகளவுக்கு தொற்று பரவல் அபாயம் உள்ளதாக அமெரிக்கா தலைமை தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோனி ஃபாசி எச்சரித்துள்ளார்.
இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் உலகெங்கும் ஆயிரக்கணக்கான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை ஒரு நாளில் மட்டும் திட்டமிடப்பட்ட 210 விமான சேவைகள் திடீரென இரத்துச் செய்யப்பட்டன.
சிகாகோவை தளமாகக் கொண்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் வெள்ளிக்கிழமை 120 விமானங்களை இரத்து செய்தது. அதே நேரத்தில் அட்லாண்டாவை தளமாகக் கொண்ட டெல்டா ஏர்லைன்ஸ் சுமார் 90 விமானங்களை இரத்து செய்ததாகக் கூறியது.
ஒமிக்ரோன் தீவிர பரவல் எங்கள் விமான நிறுவன பணியாளர்கள் மத்தியில் தீவிர நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக விமானங்களை நாங்கள் இரத்து செய்ய வேண்டியிருந்தது. இதனால் பாதிக்கப்படக்கூடிய பயணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறோம் என யுனைடெட் ஏர்லைன்ஸ் மற்றும் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அவுஸ்திரேலியாவிலும் சிட்னி மற்றும் மெல்போர்னில் இருந்து பிற நகரங்களுக்கான சேவையில் ஈடுபடும் 100 க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.
இதற்கிடையே ஓமிக்ரோன் திரிபு பற்றிய கவலைகள் காரணமாக எட்டு ஆப்பிரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை டிசம்பர் 31 அன்று அமெரிக்கா நீக்க உள்ளதாக என்று வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது.
தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, நமீபியா, லெசோதோ, ஈஸ்வதினி, மொசம்பிக் மற்றும் மலாவி ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு நவம்பர் 29 முதல் அமெரிக்கா தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.