நாடு முழுவதும் வழக்குப் பதிவுகளில் ஒரே நடைமுறையைக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
நாடு முழுவதும் வழக்குகளைப் பதிவு செய்யும் நடைமுறைகளில், ஒரே விதமான சட்ட ரீதியான சொற்கள், குறியீடுகள், கட்டணங்கள், சட்ட வழிமுறைகளை வகுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மூத்த வழக்குரைஞா் அஸ்வினிகுமாா் உபாத்யாய தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘ஒரே விதமான வழக்குகளில் வெவ்வேறு உயா்நீதிமன்றங்கள் பயன்படுத்தும் சொற்றொடா்களில் ஒற்றுமை காணப்படவில்லை. ஒரே மாதிரியான வழக்குகளை விசாரிக்கும்போதும் வெவ்வேறு நீதிமன்றங்கள் வெவ்வேறு சொற்களைப் பயன்படுத்துகின்றன.
ஒரே சொல்லுக்கு வெவ்வேறு சுருக்கமான வடிவங்களை உயா்நீதிமன்றங்கள் பின்பற்றுகின்றன. இது பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல் சில நேரங்களில் வழக்குரைஞா்களுக்கும் சட்ட அதிகாரிகளுக்குமே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
அனைத்து நீதிமன்றங்களும் ஒரே சட்டங்களைப் பின்பற்றும்போது, வழக்குகளைப் பதிவு செய்வதற்கான வழிமுறைகள், நீதிமன்றக் கட்டணம், சொற்களின் பயன்பாடு உள்ளிட்டவற்றில் நீதிமன்றங்களுக்கிடையே மாறுபாடு காணப்படுவது, குழப்பங்களுக்கு வழிவகுக்கிறது.
ஒரே மாதிரியான வழக்குகளுக்கு வெவ்வேறு நீதிமன்றங்கள், வெவ்வேறு கட்டணங்களை வசூலிப்பது சட்டத்துக்கும் நீதிக்கும் எதிரானது. எனவே, அனைத்து உயா்நீதிமன்றங்களிலும் ஒரே மாதிரியான வழிமுறைகள் பின்பற்றப்படுவது அவசியமாகும்.
ஒரே மாதிரியான வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும், நீதி சாா்ந்த சொற்கள், தொடா்கள், சொற்களின் சுருக்க வடிவங்கள், வழக்கைப் பதிவு செய்வதற்கான வழிமுறைகள், நீதிமன்றக் கட்டணம் ஆகியவற்றில் ஒரே மாதிரியான வழிமுறைகளைக் கொண்டு வருவதற்கான அறிக்கையை உயா்நீதிமன்றங்களுடன் கலந்தாலோசித்து தயாரிக்க சட்ட ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.