ஐ.தே.கவோடு உறவாடிய கூட்டமைப்பு மக்களுக்கு எதையும் பெற்றுக் கொடுக்கவில்லை – அங்கஜன்
ஐ.தே.கவோடு உறவாடியபோது மக்களுக்கு பெற்றுக் கொடுக்காததை எதிர்க்கட்சியில் அமர்ந்து கூட்டமைப்பினர் பெற்றுக் கொடுப்பார்களா? நடைமுறைச் சாத்தியமற்ற கருத்துக்களை மக்களிடம் கூறுகின்றனர் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் முதன்மை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
யாழ் ஊடக மன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மக்களுடைய ஆதரவு நாளாந்தம் எமக்கு பெருகிவருகிறது. மாற்றம் ஒன்றை மேற்கொள்ளப்பட வேண்டும் என பலர் முன்னின்று செயற்படுகின்றனர். தொடர்ச்சியாக ஏமாற்றமடைந்த தாம் இனியும் ஏமாறக் கூடாது என்பதற்காக இந்த மாற்றத்தினை மக்களும் விரும்புகின்றனர். இந்த மாற்றத்திற்கான அலையில்தான் நாங்களும் அரசியலை மேற்கொள்கின்றோம்.
தேர்தலுக்குப் பின் புதிய அரசியலமைப்பு ஒருவருடத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறியுள்ளார். தீபாவளிக்கு தீர்வு என்பதைப் போல் மீண்டும் ஒருவருடம் மேலதிகமாக கூட்டமைப்பினர் கேட்கின்றனர். கடந்த நான்கு அரை வருடங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் வடக்கு கிழக்கு கிளையாக கூட்டமைப்பினர் இயங்கினர். இந்த நான்கரை வருட காலங்களில் பெற்றுத் தராதா தீர்வையா எதிர்வரும் ஓரு வருடத்திற்குள் பெற்றுத் தரப்போகின்றனர்.
நல்லாட்சியில் கூட்டமைப்பினர் எதுவிதமான அழுத்தங்களையும் பிரயோகிக்காமல் சரணாகதி அரசியலையே மேற்கொண்டனர். ஐ.தே.கவோடு உறவாடியபோது மக்களுக்கு பெற்றுக் கொடுக்காததை எதிர்க்கட்சியில் அமர்ந்து பெற்றுக் கொடுப்பார்களா? நடைமுறைச் சாத்தியமற்ற கருத்துக்களை மக்களிடம் கூறுகின்றனர். கடந்த காலங்களில் கூட்டமைப்பை நம்பி ஏமாந்தது போல் மக்கள் இம்முறையும் ஏமாறத் தயார் இல்லை இதனை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
கூட்டமைப்பினர் கடைசிக்கட்ட பிரச்சாரப் பணிகளை கவனிக்காது எம்மீது அக்கறை காட்டுகின்றனர். அரசை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்படுகின்றார். அவர் வெற்றி பெற்றாலும் அவரது உறுப்புரிமை பறிக்கப்படும் என கூட்டமைப்பின் பேச்சாளர் கூறியுள்ளார்.
நான் அவருக்கு ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அதாவது நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் அல்ல என்பதனை அவர் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். அனந்தி , அருந்தவபாலன் போன்றோரை துரத்தியது போலும் சரவணபவனை துரத்தவுள்ளது போலும் என்னையும் துரத்திவிடலாம் என நினைத்துவிட்டார். கூட்டமைப்பினர் தோல்வி பயத்தில் முன்னுக்கு பின் முரணாக பேசுகின்றனர்.
கூட்டமைப்பினர் என் மீது சேறுபூசி அரசியல் செய்வதை விடுத்து மக்களுக்கு தாங்கள் என்ன செய்யப்போகின்றோம் என்பதனை சொல்லி வாக்குகளை கேட்க வேண்டும். அரசியல் தீர்வு, வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் கூட மக்களுக்கு கிடைக்கவில்லை. இதுவரை காலமும் கூட்டமைப்பினர் மக்களுக்கு என்ன செய்தனர் என்ற கேள்வி எழுகின்றது.
நல்லாட்சியில் கூட்டமைப்பினர் மக்களுக்கான நலத் திட்டங்களை பெற்றுக் கொடுக்காது தங்களுக்கான நலத் திட்டங்களையே கேட்டுப் பெற்றுக்கொண்டனர். இவர்களும் மக்களுக்கு நல்லது செய்வதில்லை. மக்களுக்கு நல்லது செய்பவர்களையும் அரசியல் செய்ய விடுவதில்லை. இவர்களுக்கு இம்முறை மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும், என்றார்.
Comments are closed.