பொருளாதார வீழ்ச்சிக்கு ராஜபக்ச அரசே பொறுப்பு! – ஐ.தே.க. பதிலடி.

“நாட்டின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு ஆட்சியிலுள்ள ராஜபக்ச அரசே பொறுப்புக்கூற வேண்டும்.”

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு கடந்த அரசே பிரதான காரணம் என அரசு தெரிவித்துவரும் குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘

“நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்திருகின்றது. இதிலிருந்து மீள்வதற்கு அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை. எனினும், வீழ்ச்சியடைந்து செல்லும் நாட்டைக் கட்டியெழுப்ப நாட்டின் பழைமையான, அனுபவமுள்ள கட்சி என்ற வகையில் 15 வருடங்களுக்கு மாற்ற முடியாத கொள்கைத் திட்டம் ஒன்றை அமைத்து வருகின்றோம். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் அடிப்படையிலேயே இது அமைக்கப்படுகின்றது.

நாட்டின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சி உட்பட ஆட்சி செய்த அனைத்து அரசுகளும் பொறுப்புக்கூற வேண்டும் என அரசு தெரிவித்து வருகின்றது. இந்த நிலைமைக்கு நாங்கள் பொறுப்புப்கூற வேண்டியதில்லை.

2015இல் இருந்து 2019 வரை எமது அரசில் பொருளாதாரத்தை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்து, எந்தப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் பாதுகாத்து வந்தோம். அதற்கான வேலைத்திட்டங்களை நாங்கள் அமைத்திருந்தோம். அதனால்தான் எம்மால் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை மேற்கொண்டு, எரிபொருள், எரிவாயு உட்பட அத்தியாவசியப் பொருட்களைத் தட்டுப்பாடு இல்லாமல் குறைந்த விலைக்குக் கொடுக்க முடியுமாகியது.

ஆனால், இந்த அரசு ஆட்சிக்கு வந்ததுடன் எமது திட்டங்கள் அனைத்தையும் இல்லாமல் செய்து, அரசுடன் இருக்கும் வியாபாரிகளுக்குத் தேவையான மாதிரி பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ய ஆரம்பித்தது. அதன் பெறுபேறே தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமாகும். அதனால் நாட்டின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு ஆட்சியிலுள்ள ராஜபக்ச அரசே பொறுப்புக்கூற வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.