டில்வின்-விஜித சொல்லை மீறி எவரும் ஜே.வி.பியுடன் இணையலாம் என அழைக்கும் ஜயதிஸ்ஸ!
“மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து கூட்டணி அமைக்க ஆளுந்தரப்பைச் சேர்ந்த சிலர் பேச்சு நடத்தி வருகின்றனர்.”
– இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
“மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தி கூட்டணியுடன் விமல் வீரவன்ச மற்றும் குமார் குணரட்னம் ஆகியோர் இணைய முடியும். எனினும், தேசிய மக்கள் சக்தி முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு இணங்குவார்கள் என்றால், அவர்கள் கூட்டணியில் இணைந்து புதிய அரசை அமைக்கும் போராட்டத்தில் இணைந்துகொள்ள முடியும்” எனவும் அவர் கூறினார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே ஜயதிஸ்ஸ இதனைக் குறிப்பிட்டார்.
இந்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“யுகதனவி மின் உற்பத்தி நிலையம் மற்றும் எரிவாயு விநியோகத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கியமைக்கு எதிராக விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் நீதிமன்றத்துக்குச் சென்றதை நான் வரவேற்கின்றேன்.
அதேபோல், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைவது தொடர்பாகப் பேசியமைக்குத் தயாசிறி ஜயசேகரவுக்கு நன்றி கூறுகிறேன்.
இதனடிப்படையில், தேசிய மக்கள் சக்தி முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு இணங்கினால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து செயற்பட முடியும்.
ஊழல், மோசடிகளுக்கு எதிராக அரசுக்குள் இருந்துகொண்டு போராடும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலர் ஏற்கனவே மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து கூட்டணி அமைக்கப் பேச்சு நடத்தி வருகின்றனர்.
இவர்களின் உதவியைத் தீர்க்ககரமான சந்தர்ப்பத்தில் நாங்கள் பெற்றுக்கொள்வோம்.
இதனடிப்படையில், தேசிய மக்கள் சக்தியின் நிபந்தனையை ஏற்கும் அனைத்துத் தரப்பினரையும் இணைத்துக்கொண்டு, எதிர்காலத்தில் மக்கள் சார்பான அரசை அமைக்க மக்கள் விடுதலை முன்னணி நடவடிக்கை எடுக்கும்” – என்றார்.