ஒமைக்ரான் அதிகரிப்பால் உத்தரப்பிரதேசம் உள்பட 5 மாநில தேர்தல் தள்ளி வைக்கப்படுமா?
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் பரவல் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், 5 மாநில சட்டமன்ற தேர்தல் தள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வி பரவலாக எழுந்திருக்கிறது.
ஓமைக்ரான் தொற்று பரவல் வேகமாக அதிகரித்துவரும் சூழலில் 5 மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்த தகவல்களை ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்தியாவைப் பொறுத்தளவில் ஒமைக்ரான் பாதிப்பு 570 கடந்துவிட்டது. அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 167 பேருக்கு ஒமைக்ரான் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில் ஒமைக்ரான் பாதிப்பு இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று சுகாதாரத்துறை வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே இந்தியாவே எதிர்பார்க்கும் 5 மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்த சமீபத்தில் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய சூழலில் 5 மாநில சட்டமன்ற தேர்தலை நடத்தினால், கொரோனா மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக சுகாதாரத் துறை வல்லுநர்கள் எச்சரிக்கை செய்திருந்தனர். இதனால் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், மற்றும் உத்தராகண்ட் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் ஒத்திவைக்க வேண்டும் என்று சிலர் வலியுறுத்தி வந்தனர்.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் பல கட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்தி உள்ளது. மிக முக்கியமாக இன்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் உடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் போடப்பட்டுள்ள தடுப்பூசி விபரம், நோய் பரவல், பாதிப்பு உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பெற்றுக் கொண்டார்கள்.
அடுத்த கட்ட நடவடிக்கையாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் உத்தரப் பிரதேசத்துக்கு நாளை சென்று அங்கு தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்கள். இதே போன்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக துணை ராணுவத்தினரிடமும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
இதற்கிடையே உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலையொட்டி பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. சமீபத்திய தகவல்களின் அடிப்படையில் ஒமைக்ரான் காரணமாக 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படாது என்றே கூறப்படுகிறது.