2 தவணை தடுப்பூசி அவசியம்: புதுச்சேரி புத்தாண்டு கொண்டாட்ட கட்டுப்பாடுகள்
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாடட்டத்தையொட்டி வரும் பக்தர்கள் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது வழிகாட்டு நெறிமுறைகளை புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நட்சத்திர விடுதி உள்பட அனைத்து விடுதிகளிலும் 50% சுற்றுலா பயணிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
புத்தாண்டு கொண்டாட விடுதிகளில் தங்க வருவோர் 2 தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
புத்தாண்டு கொண்டாடும் நட்சத்திர விடுதிகள், கேளிக்கை விடுதிகள், தனி நிகழ்ச்சிகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு 2 மணிக்கு மேல் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி புதுச்சேரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அவர்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும் அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் புதுச்சேரியில் 2 பேர், காரைக்காலில் 4, மாஹேயில் 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.