மாகாணசபையை வீணடித்த விக்கி பாராளுமன்றம் சென்று எதை சாதிக்கப் போகிறார் ? – க.இன்பராசா

சீ.வி.விக்னேஸ்வரன் ஐயா பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதானது தமிழரின் வாக்கினையும், அவரது நேரத்தினையும் வீணடிக்கும் ஒரு செயற்பாடாகவே அமையும். அதியுச்ச பெரும்பான்மையைக் கொண்ட மாகாணசபையிலேயே சொல்லிக் கொள்ளும் அளிவில் எதனையும் செய்யாதவர் பாராளுமன்றம் சென்று எதனைச் சாதிக்கப் போகின்றார்? என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா கேள்வியெழுப்பியுள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் நேற்று மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

2020ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பற்பல அரசியல் கட்சிகளும் சிறுசிறு கட்சிகளைக் கூட்டு இணைந்த கூட்டணிகளுக்கும் பாராளுமன்ற ஆசனங்களை பெற்றுக்கொள்வதற்கு கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றன. இந்த வகையில் தமிழர்களின் பிரச்சனைகளை நிரந்தரமாக தீர்த்து வைக்கும் முனைப்புடன் சி.விக்னேஸ்வரன் அவர்கள் பாராளுமன்ற ஆசனத்தை கைப்பற்றுவதற்கு மும்முறமான முயற்சியினை தனது கட்சியினையும் கூட்டினைந்த கட்சியினையும் இணைத்து முன்னோக்கி செல்கின்றார்கள். இவர் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படின் எதனை சாதிக்கப் போகின்றார் என எமக்கு விளங்கவில்லை.

2013 வடமாகாணசபைத் தேர்தலுக்கு முன் மாகாண சபையினை முழுமையாக கைப்பற்றினால் முதலமைச்சராக யாரை முன்நிறுத்துவது என்ற பெரிய கேள்வி காணப்பட்ட போது உயர் நீதிமன்ற நீதியரசராக இருந்து ஓய்வு பெற்று இருந்த சி.விக்னேஸ்வரன் ஜயா அவர்களை இப் பதவிக்கு பொருத்தமானவராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் வடமாகாணம் உட்பட யாழ்ப்பாண தேர்தல் தொகுதியிலும் பெருவாரியான வாக்குகளை மக்கள் அளித்து அதிபொரும்பான்மையான 30 ஆசனங்களுடன் வட மாகாணத்தின் தேர்தலூடாக 01வது முதலமைச்சராக தமிழ் மக்களின் ஏகதெரிவாக சி.விக்னேஸ்வரன் ஜயா தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் அரியாசனத்தில் அமர வைத்ததுடன் அவர் தமக்கு ஒரு மாற்றத்தினை ஏற்படுத்துவார் என்ற அவாவில் இருந்தனர்.

தமக்கு ஒரு விமோச்சனத்தை தருவார் என சாதாரண மக்கள், கல்வி கற்ற குடிமகன் முதல் சர்வதேச புலம்பெயர் தமிழ் மக்களும் இவரின் அணுகுமுறைகளை ஆவலுடன் அவதானித்து கொண்டு இருந்தனர். ஆனால் மாகாணசபைக்கென்று வறையறுக்கப்பட்ட அதிகாரங்கள் காணப்பட்ட போது அவ் அதிகாரங்களுக்குட்பட்டு செய்யவேண்டிய செயற்பாடுகளையும் கருமங்களையம் இவர் சரிவரச் செய்யவில்லை என்பதே எமது ஆதங்கமாகும்.

ஏனெனில் யுத்தம் நிறைவடைந்து 04 வருடங்களின் பின் நடாத்தப்பட்ட வடமாகாண சபைக்கான முதலாவது தேர்தலும், ஆட்சி அதிகாரத்தின் தீர்மானங்களை நிறைவேற்ற கூடியளவான நிறைவான ஆசனங்களும் 30ஃ36 என்ற ஆசனங்கள் கிடைத்தது. அதாவது முதலமைச்சர் தலைமையேற்று நின்ற கட்சியானது 30 ஆசனங்களினைப் பெற்றிருந்நது. ஆனால் 40 க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதும் அவற்றில் சிலவற்றைத் தவிர மற்றைய தீர்மானங்கள் எவையும் நிறைவேற்;றப்படவும் இல்லை அவையும் முக்கிய பயனளிக்கக் கூடியளவாக அமையவுமில்லை.

தமிழர்களை நோக்கி மறைமுகமாகவும், நேரடியாகவும் பிரயோகிக்கப்படுகின்ற அழுத்தங்கள், சவால்கள் காத்திருந்த போதும் இவரது ஆட்சிக் காலமானது காலத்தை வீணடிக்கும் ஒரு அசமந்த ஆட்சியாகவே காணப்பட்டது.

முதலமைச்சர் பதவிக்கு ஒரு திறமையான ஓய்வு பெற்ற நீதியரசர் அமர்ந்து செயற்படுத்தப் போகின்றார் என்றபோதே சாதாரண குடிமகனுக்கும் நமக்கு விமோசனம் கிடைக்கப் போகின்றது என அவாவில் இருந்தனர். ஆனால் அனுபவத்தைக் கொண்ட இவர் நான்கு ஆண்டு ஆட்சிக் காலத்தில் வடமாகாணத்தில் எதனைச் செய்தார் எனப் பிரத்தியோகமாக குறிப்பிடப்படும் அளவிற்கு எதுவும் அமையவில்லை.

குறிப்பாக வடமாகாணத்தில் ஏனைய மாகாணங்களை விட செய்வதற்கான பல அபிவிருத்தித்திட்டங்கள் உள்ளன. அதே வேளை ஒப்பீட்டளவில் எமது மாகாணமும் பௌதிக வளங்கள் ரீதியாக இலங்கையில் உள்ள ஏனைய மாகாணத்துடன் ஒப்பிடும் போது வளம் குன்றிய ஒரு மாகாணமுமல்ல ஆனால் இவற்றினை உரியவாறு பயன்படுத்தவே இல்லை.

தனிநாட்டிற்காகப் போராடி அது இல்லாதோழிக்கப்பட்டதன் பின் ஒரு ஜனநாயக சோசலிசக் குடியரசின் கீழ் மாகாணசபை முறைமை வருகின்ற போது தனி நாட்டினை பிரித்தெடுத்து ஆட்சி செய்ய முற்பட்ட நாம் அரசின் கீழ் இவ்வாறான பல இயற்கை வளங்களையும், அயராது உழைக்;கின்ற மனித வளங்களையும் தன்னகத்தே கொண்ட வடக்கு மாகாண சபையானது அபிவிருத்தி, பொருளாதார முன்னேற்றம் நோக்கிய எத்தீர்மானங்களையும் நிறைவேற்றவில்லை, நடைமுறைப்படுத்தவும் இல்லை. மாகாண சபையில் இலகுவில் தீர்மானங்களை எட்டக் கூடிய வாக்குப் பலம் இருந்தவேளையில் தமிழர்களுக்கான ஆட்சி என்றால் இப்படித்தான் சகல செழிப்புடனும் இருக்குமென்று இலங்கைத் தீவின் ஏனைய மாகாண சபைகளுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் எடுத்துக் காட்டும் விதமாக ஒரு செழிப்பான அபிவிருத்தி நோக்கிய ஒரு ஆட்சி முறையினை சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கொடுத்திருக்கலாம்.

பல செயற்பாடுகளை செய்யக் கூடிய சக்தியும் அதிகாரமும் பண பலமும் மாகாணசபை முறைமையில் முதலமைச்சருக்கு காணப்பட்டது. இவற்றை பயன்படுத்தி 05 மாவட்டங்களின் அபிவிருத்தியையோ, மக்களின் தேவை நிறைவினையோ, பொருளாதார முன்னேற்றத்தையோ யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கான மீள்குடியேற்றத்தையோ, நாட்டிற்காக போராடிய, நிற்கதியில் நிற்கின்ற புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் அவர்களது குடும்பங்கள் மற்றும் அங்கவீனமுற்றவர்களின் பிரச்சனைகள் என பலவற்றையும் நிறைவேற்றாத ஜயா அவர்கள் யாழ்ப்பாண தேர்தல் தொகுதி ஊடாக பாராளுமன்றம் சென்று எதனை சாதிக்கப் போகின்றார்.

வட மாகாண சபையால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட வேலைவாய்ப்புகளில் அதாவது சிற்றூழியர்களுக்கான வேலை வாய்ப்புகளில் உதாரணமாக விரைவூர்தி சாரதிகள் மற்றும் வாகன சாரதி, சுகாதார தொழிலாளர்கள் சிற்றூழியர்கள், காவலாளிகள், முகாமைத்துவ உதவியாளர்கள், தொண்டர் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் வேலை வாய்ப்புகளில் திறமையுள்ள முன்னாள் போராளிகளை அவர்களது திறமைகளின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு முறைகளில் 10 அல்லது 20 வீத இட ஒதுக்கீட்டை அளித்திருக்கலாம்.

இதனால் நாட்டிற்காகப் போராடிய அவர்களை வீதியில் கைவிடும் நிலையினை தவிர்த்திருப்பதுடன் வெளிப்படையாக அவர்களின் திறமைக்கேற்ப ஆட்சேப்பில் உள்வாங்கி இருக்கலாம். புலம் பெயர் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களை வடக்கு கிழக்கில் முதலீடு செய்ய வைத்து அவர்களினால் ஸ்தாபிக்கப்படுகின்ற கைத்தொழில் நிலையங்கள் மூலம் எமது இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்திருந்திருக்கலாம். தொழில் வாய்ப்புக்களினை நாமே ஏற்படுத்திக் கொடுத்திருப்போமானால் எமது இளம் யுவதிகள், குடும்பப் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கோ அல்லது கொழும்பை நோக்கியோ, கைத்தொழில் சாலைகளுக்கோ வேலை வாய்ப்பினைப் பெற செல்கிறார்கள். அவ்வாறு செய்திருந்தால் எமது கலாச்சார விழுமியங்களும் பாதிக்கப்பட்டிருக்காது. ஒரளவேணும் பாரம்பரிய கலாச்சார ஸ்திர தன்மையில் நாம் இறுக்கமாக இருந்திருப்போம்.

இவ்வாறு கிடைத்தற்கரிய சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிட்ட சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பாராளுமன்றம் சென்று புதிதாக மக்களுக்கு எத்தீர்வினை அல்லது பொருளாதார முன்னேற்றத்தைப் பெற்றுக் கொடுப்பார்.

ஆனால் இன்றும் சில மக்கள் சி.வி.விக்னேஸ்வரன் ஜயா என்ற மாயையிலிருந்து விடுபடாது அவரை உயர்வாகவே பார்க்கின்றனர். அவர் ஒரு கல்விமான் என்ற ரீதியில் மிகுந்த மரியாதை கொண்டுள்ளனர். ஆனாலும் யதார்த்த அரசியல் என்பது இவருக்கு பொருந்தவில்லை. இவர் தன்னை உணர்ந்து நீதியரசருக்கான ஓய்வூதிய பணத்தைப் பெற்றுக் கொண்டு, நீதித் துறையின் பல முன்னேற்றங்களையும், இளம் தமிழ் சட்டத்தரணிகளின் அபிவிருத்தி முன்னேற்றம், இவர்களது திறன்விருத்தி, நீதித்துறையின் முன்னேற்றத்திற்கான ஆய்வுகள், சி.ஜே.வீரமந்திரி போன்று சர்வதேச நீதிமன்ற விவகாரங்கள் மற்றும் எமது தமிழர் பிரச்சனையினை சர்வதேசம் வரை கொண்டு செல்லும் செயற்திட்டம் என்பவற்றில் ஈடுபட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்குமென தோன்றுகின்றது.

இதை விடுத்து பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதானது தமிழரின் வாக்கினையும், அவரது நேரத்தினையும் வீணடிக்கும் ஒரு செயற்பாடாகவே அமையும். இவரால் புதிதாக பராளுமன்றம் சென்று சாதிப்பதற்கு எதுவும் இல்லை.

Comments are closed.