தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி, 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் கேஎல் ராகுல் சதம்(123) மற்றும் மயங்க் அகர்வால்(60) அரைசதம் விளாச, இந்திய அணி 327 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து முதல் இன்னிங்சை துவங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு விக்கெட்டுகள் மளமளவென விழுந்தன. ஒரு கட்டத்தில் 100 ரன்களுக்குள் தென்னாப்பிரிக்கா சுருண்டு விடும் என எதிர்பார்த்த போது, பவுமா நிதானமாக விளையாடி அரை சதம் அடித்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 197 ரன்கள் வரை சென்று ஆட்டமிழந்தது.
முதல் இன்னிங்சில் இந்திய அணி 130 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. அதன் பிறகு இரண்டாவது இன்னிங்சை துவங்கியபோது சுதாரித்துக் கொண்ட தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள், இந்திய பேட்ஸ்மேன்களின் பலவீனமான இடத்தைப் பார்த்து பந்துவீசினர். இதனால் 174 ரன்களுக்குள் இந்தியா சுருண்டது. 304 ரன்கள் முன்னிலை பெற்று, தென் ஆப்பிரிக்க அணிக்கு 305 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
சற்று கடினமான இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணி துவக்கத்தில் 1, 2 விக்கெட்டுகள் இழந்தாலும் அதன் கேப்டன் டீன் எல்கர் மிகவும் நிதானமாக விளையாடி மறுமுனையில் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டார். கடைசி 30 நிமிடங்களுக்குள் 2 விக்கெடுகளை பும்ரா பந்தில் இழந்ததால், 4-ஆம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்திருந்தது. 52 ரன்களுடன் கேப்டன் டீன் எல்கர் களத்தில் இருந்தார்.
ஐந்தாம் நாள் ஆட்டத்தின்போது இந்திய அணிக்கு வெற்றி பெறுவதற்கு 6 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்பட்டது. இந்த நிலையில் துவக்கம் முதலே தாக்குதலில் ஈடுபட்டனர். நிலைத்து ஆடி வந்த எல்கர் 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மிடில் ஆர்டரில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த பவுமா 35 ரன்கள் எடுத்திருந்தார்.
ஆனால் மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பியதால், 191 ரன்களுக்குள் தென்னாபிரிக்க அணி சுருண்டது. இதன் மூலம் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் முதல் போட்டியை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது இன்னிங்சில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சமி இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும், சிராஜ் மற்றும் அஸ்வின் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடி சதம் விளாசிய கேஎல் ராகுல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.