கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் 1 கோடிக்கும் அதிகமானோர் சுவாமி தரிசனம் – திருப்பதி தேவஸ்தானம் தகவல்
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் 2021-ம் ஆண்டில் மட்டும் திருப்பதி கோயிலில் 1 கோடிக்கும் அதிகமானோர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
2020-ம் ஆண்டு தொடக்கத்தில் தீவிரம் அடைந்த கொரோனா உலகின் பெரும்பான்மையான நாடுகளுக்கும் பரவி பேரழிவை ஏற்படுத்தியது. மனித சமூகம் இதுவரை கண்டிராத அளவுக்கு சுமார் ஓராண்டுக்கும் மேலாக முழுமையான பொது முடக்கத்தை எதிர்கொண்டது.
இந்த காலகட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வழி பாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பின்னர், பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பபட்டதை தொடர்ந்து, வழிபாட்டுத் தலங்களில் மக்கள் வழிபாடு நடத்திக் கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
2021-ம் ஆண்டிலும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்ததால் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதிக்கப்பட்டனர். அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1 கோடிக்கும் அதிகமானோர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக 2019-ம் ஆண்டில் மட்டும் 2.50 கோடிப்பேர் சுவாமி தரிசனம் செய்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
2021-ம் ஆண்டில் மட்டும் திருப்பதி உண்டியலில் 833 கோடி ரூபாய் ரொக்கப் பணம் சேர்ந்துள்ளது. லட்டு விநியோகத்தின் மூலமாக மட்டும் ரூ. 300 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.